அ.தி.மு.க பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ் என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பாதிலேயே ஓபிஎஸ் வெளியேறினார். அவருக்கு மூத்த தலைவர்கள் யாருமே சரியாக மதிப்பளிக்கவில்லை. மேலும் அவர் மீது பாட்டில் வீசி எறியபட்டது. இந்நிலையில் அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தார் தொடர்ந்து அவர் டெல்லிக்கு பயணித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் இந்நிலையில் கட்சியை பிளவுபடுத்தவே ஓபிஎஸ் முயற்சிக்கிறார் என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
”ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக பிளவிற்கு பிழையார் சுழி போட்டது யார் என்று உங்களுக்கு தெரியும். ஒரு மனதாக ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக தேர்வு செய்ததற்கு பின்பு. அந்த முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து வைத்தது யார்? அனைவரும் அதை சிந்திக்க வேண்டும். அன்று பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைத்த பஞ்சாயத்துதான் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் யாரும் இந்த பஞ்சாயத்தை தொடங்கி வைக்கவில்லை. அந்த பஞ்சாயத்தில் அவர் வைத்த கோரிக்கைகள் என்ன?. விசாரணை கமிஷன் வேண்டும். சசிகலா மற்றும் சசிகலாவின் குடும்பத்தை சேர்க்க கூடாது. அம்மா வாழும் இல்லத்தை நினைவு சின்னமாக மாற்ற வேண்டும் என்றார். அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிறகு ஏன் டிடிவி தினகரனை ரகசியமாக சந்திக்கிறார். கலந்து பேசுகிறார் என்று ஊடகங்கள் பன்னீர் செல்வத்திடம் கேள்விகேட்டீர்கள்.
தலைமை என்பது எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இறுதி மூச்சுவரை எடுத்த நிலைபாடோடு இருக்க வேண்டும். ஒரு வலிமை மிகுந்த தலைமை வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. முடிவை மாற்றி மாற்றி எடுத்து சந்தேகத்திற்குறிய தலைமையாக இருக்க வேண்டியதில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்களது உயிரை பணயம் வைத்துதான் கட்சிக்காக உழைத்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை வழி நடத்துகிற தலைமை என்பது மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
அதைத்தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். மூத்த தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் அவர் பேச்சு வார்த்தைக்கே வர மறுக்கிறார். முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொனார். நான் உள்பட பல மூத்த தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது அவர் தொண்டர்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை. ஓர் நிர்வாக சீர்திருத்ததிற்கு அவர் ஒத்துழைக்கவில்லை. ” என்று அவர் கூறியுள்ளார்.