முனிச் : ஜி – 7 மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச தலைவர்களுடன் பருவநிலை, எரிபொருள், உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய ஏழு பணக்கார நாடுகள் அடங்கிய, ‘ஜி – 7’ அமைப்பின் மாநாடு, ஜெர்மனியில் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது.
உற்சாக வரவேற்பு
இந்த மாநாட்டில் விருந்தினராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெர்மன் தலைவர் ஓலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி நேற்று ஜெர்மன் சென்றார். அங்கு, ஜெர்மன் வாழ் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:ஜி – 7 மாநாட்டின் போது, ஜி – 7 நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகளுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்.
பயங்கரவாத எதிர்ப்பு
அப்போது, சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புடினை கிண்டலடித்த தலைவர்கள்
ஜி – 7 நாட்டு தலைவர்களுக்கு ஜெர்மனி தலைவர் ஓலாப் ஸ்கால்ஸ் நேற்று மதிய விருந்து அளித்தார். அப்போது அங்கு வந்து அமர்ந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ”என் மேல் கோட்டை அகற்றிவிடவா,” என, இதர நாட்டு தலைவர்களிடம் கேட்டார்.”புகைப்படங்கள் எடுத்த பின் அகற்றுவோம்,” என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
”நாம் கோட்டை கழற்றினால் தானே நாம் எவ்வளவு வலிமையானவர்கள் என்பது ரஷ்ய அதிபர் புடினுக்கு தெரியும்,” என, ஜான்சன் கூறியதற்கு மற்ற தலைவர்கள் சிரித்தனர். மேல்சட்டையின்றி குதிரை சவாரி செய்த ரஷ்ய அதிபர் புடின் புகைப்படம், 2009ல் வெளியாகி பரபரப்பானது. இதை மையமாக வைத்து தான் தலைவர்கள் கிண்டல் அடித்தனர்.
தங்க இறக்குமதிக்கு தடை!
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து, அமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ”ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க, ஜி – 7 மாநாட்டில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.மேலும், ஜி – 7 உறுப்பு நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் பைடன் தெரிவித்தார்.