பொருளாதார ரீதியாக உடைந்து போயிருக்கும் இலங்கை இன்னும் சீராகவில்லை. ராஜபக்சே தனது பதவியிலிருந்து விலகி ஓடி ஒளிந்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக அவரின் இடத்தை நிரப்பியிருக்கிறார். இதைத் தவிர அங்கே எந்த மாற்றமும் நிகழவில்லை. மக்களின் பசி இன்னும் ஆற்றப்படவில்லை. அழுகுரல்கள் ஓயவில்லை. அரசின் மீதான அதிருப்தியும் பெட்ரோல் டீசலுக்குக் காத்திருக்கும் வரிசையும் ஒரே சீராக பெருகிக்கொண்டிருக்கிறது. இப்படியான அமைதியற்ற செய்திகள் மட்டுமே இலங்கையிலிருந்து வந்துகொண்டிருந்த சூழலில் கொஞ்சம் ஆசுவாசமடையும் வகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அதன் நிமித்தம் இலங்கை மக்கள் கொஞ்சம் இளைப்பாறியிருப்பதாகத் தெரிகிறது. தொலைந்து போயிருந்த சிரிப்பை அவர்கள் கொஞ்சமேனும் கண்டடைந்திருப்பதாக தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் கிரிக்கெட்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை 3-2 என வீழ்த்தி ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை வென்றிருக்கிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியைத் தங்களின் சொந்தமண்ணில் வைத்து இலங்கை அணி வீழ்த்தியிருக்கிறது.
ஜூன் 25, 1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முதலாக உலகக்கோப்பையை வென்றது. அந்தச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’83 the Film’ படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இறுதிப்போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவின் ஒரு பகுதியில் மதரீதியிலான கலவரங்கள் நடந்துக்கொண்டிருக்கும். அப்போது பிரதமரான இந்திரா காந்தி அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இந்தியா ஆடும் அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய சொல்வார். கிரிக்கெட்டால் கலவரங்கள் ஓயும். ஒரே தேசமாக மக்கள் அனைவரும் கபில்தேவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பர். இப்படி ஒரு நிகழ்வு நிஜமாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், கிரிக்கெட்டுக்கு மக்களை அமைதிப்படுத்தி ஒருங்கிணையச் செய்யும் அந்த சக்தி இருக்கிறதென்பதை யாராலும் மறுக்க முடியாது. கிரிக்கெட்டுக்கு மட்டுமில்லை இது விளையாட்டுகளுக்கே உரிய ஒரு தனித்துவ பண்பு.
இலங்கையிலும் கிரிக்கெட் இப்போது அதைத்தான் செய்திருக்கிறது. மக்களைக் கொஞ்சம் அமைதிப்படுத்தியிருக்கிறது. அவர்களின் சிரிப்பை மீட்டுக்கொடுத்திருக்கிறது.
கடைசியாக 1992-ல் தங்கள் நாட்டுக்கு ஆலன் பார்டர் தலைமையில் வந்திருந்த ஆஸ்திரேலிய அணியை ஓடிஐ தொடரில் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி 2-1 என வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, 30 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அதேமாதிரியான சம்பவத்தை மீண்டும் நிகழ்த்தியிருக்கின்றனர்.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் 3-2 என வீழ்த்தியிருக்கின்றனர். இப்போதைய இலங்கை அணி அவ்வளவு வலுவான அணி கிடையாது. இலங்கையின் பொருளாதாரம் விழுவதற்கு முன்பே இலங்கையின் கிரிக்கெட் விழுந்துவிட்டது. பொருளாதாரத்தை போன்றே தரைமட்டத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில்தான் கிரிக்கெட்டும் இருக்கிறது. இடையிடையே சில நம்பிக்கைக்குரிய வெற்றிகள் அந்த அணிக்கு கிடைத்திருந்தாலும் அந்தப் பழைய வலுவான அணியாக இலங்கையால் இன்னும் மாறவே முடியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று 4-1 என டி20 தொடரை இழந்துவிட்டு வந்தனர். அப்படியே இந்தியாவிற்கு வந்து இங்கேயும் அடிவாங்கிவிட்டு சென்றனர். ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக மட்டும்தான் சில ஆறுதல் வெற்றிகளை பெற்றிருந்தார்கள்.
இப்படியான நிலையில்தான் ஆஸ்திரேலியாவை இலங்கை அணி எதிர்கொண்டிருந்தது. இலங்கை வீரர்கள் உளவியல் ரீதியாகவே அவ்வளவு திடகாத்திரமாக இருந்திருக்கவில்லை. வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்சனா போன்றோர் இந்தியாவில் ஐ.பி.எல்-இல் ஆடிக்கொண்டிருக்கும் போதே தங்கள் நாட்டை எண்ணி பெரிதும் வருத்தமுற்று இருந்தனர். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை வெல்வது சுலபம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போன்றே சுலபமாக வெல்லவும் செய்தார்கள். ஆனால், அது டி20 தொடர். முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வென்றது. இதன்பிறகு நடந்த ஓடிஐ தொடரில்தான் இலங்கை வெகுண்டெழுந்தது.
லாக்டௌனுக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் மைதானங்களில் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையிலும் தங்கள் அணிக்காக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் டி20 போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது போட்டிக்கும் திரளாக வந்து மைதானத்தை நிரப்பியிருந்தனர். இரண்டாவது போட்டியிலும் தோற்று டி20 தொடரையே இழந்த போதும் ரசிகர்கள் கைவிட்டுவிடவில்லை. மீண்டும் கூடினர். மைதானம் மீண்டும் நிரம்பியது.
யோசித்துப் பார்த்தால் கடந்த சில மாதங்களில் இலங்கை மக்கள் வேறு யார் மீதும் இவ்வளவு நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
அரசாங்கம், ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் எல்லாவற்றின் மீதுமே அவர்களுக்கு வெறுப்புதான் எஞ்சியிருந்தது. மைதானங்களில் கூடிய இந்த ஜனத்திரள் இலங்கை வீரர்களுக்கு ஒரு புது தெம்பை கொடுத்திருக்கக்கூடும். இந்தத் தேசத்திற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்னும் கேள்வியை வீரர்களுக்குள் எழுப்பியிருக்கக்கூடும். மனச்சோர்வில் அமைதியுற்று உழன்று கொண்டிருக்கும் மக்களின் உதட்டில் சிரிப்பை வரவழைப்பதை விட உன்னதமான காரியம் வேறில்லை. இலங்கை அணி அதை செய்தது.
ஓடிஐ தொடரின் முதல் போட்டியைத் தோற்ற பிறகும் நம்பிக்கையிழக்காமல் அடுத்த மூன்று போட்டிகளையுமே வென்று ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியளித்தது. ஐந்தாவது போட்டிக்குச் செல்லும் முன்பே தொடரை வென்று சாம்பியன் ஆகியிருந்தது.
டி20 தொடரை இழந்தாலும் மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டியை இலங்கை வென்றிருந்தது. வெல்வது கடினம் என்ற சூழலிலிருந்து கேப்டன் தஸூன் சனாகா 25 பந்துகளில் 54 ரன்களையெடுத்து கடைசி ஓவர் வரை சென்று இலங்கையை வெல்ல வைத்திருப்பார்.
ஒரு வெறித்தனமான கேப்டன்ஸ் இன்னிங்ஸ் அது. அந்த புள்ளியிலிருந்துதான் இலங்கை அணி ஒரு புது உத்வேகத்தோடு அசத்த ஆரம்பித்தது.
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களை இலங்கை அடித்தது. குணதிலகா, நிஷாங்கா, குஷால் மெண்ட்டீஸ் என டாப் ஆர்டரில் மூவருமே அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர். முழுமையாக ஒரு பேட்டிங் யுனிட்டாகவே சிறப்பாகச் செயல்பட்டிருந்தனர். பௌலிங்கிலும் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மழை குறுக்கே புகுந்து ஆட்டம் காட்டிவிட டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா வென்றிருந்தது. மழை இல்லாவிடில் முதல் போட்டியே இலங்கைக்குச் சாதகமாக முடிந்திருக்கக்கூடும்.
இரண்டாவது போட்டியிலும் மழை குறுக்கிட்டது. ஆனாலும் இலங்கை வென்றது. 220 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு ஆஸ்திரேலியாவை 189 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியிருந்தனர். கருணாரத்னே, சமீரா போன்றவர்கள் பயங்கரமாக பந்துவீசியிருந்தனர்.
மூன்றாவது போட்டியில் இலங்கைக்கு 292 ரன்கள் டார்கெட். நிஷாங்காவும் குஷால் மெண்ட்டீஸூம் மட்டுமே 213 ரன்களுக்கு கூட்டணி அமைத்து இலங்கையை சௌகரியமாக வெல்ல வைத்திருந்தனர்.
நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு 259 ரன்கள் டார்கெட். இந்தப் போட்டிதான் கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவிற்கு 19 ரன்கள் தேவை என்ற சூழலில் Khunemann 3 பவுண்டரிகளை அடிக்க, கேப்டன் சனாகா கடைசி பந்தில் அவரின் விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெல்ல வைத்திருந்தார். இந்த போட்டியில் 43 ஓவர்களை ஸ்பின்னர்களுக்கு கொடுத்து சனாகா தனியாக ஒரு ரெக்கார்டும் படைத்திருந்தார்.
இத்தோடு இலங்கை அணி இந்தத் தொடரையும் வென்றது. சம்பிரதாயத்திற்கு நடந்த கடைசி போட்டியை ஆஸ்திரேலியா வெல்ல 3-2 என இலங்கை அணி தொடரை வென்றது.
சமீபத்தில் இலங்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வு இதுதான். இலங்கை மக்களின் முகத்தில் மீண்டும் சிரிப்பலைகள் தென்பட்டன.
என கேப்டன் சனாகா இலங்கை மக்களுக்கு செய்தி சொன்னார். ஆனால், இலங்கை மக்கள் தங்கள் கொண்டாட்டத்திற்குக் காரணமான இலங்கை வீரர்களை மட்டும் கொண்டாடவில்லை. அவர்களோடு சேர்த்து ஆஸ்திரேலிய வீரர்களையுமே கொண்டாடினர். தொடரை இலங்கை வென்ற பிறகு சம்பிரதாயத்திற்கு நடந்த ஐந்தாவது போட்டியை ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டாட பயன்படுத்திக் கொண்டனர்.
கொழும்புவில் நடந்த அந்தப் போட்டியை காண பெரும்பாலான இலங்கை ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சி அணிந்து கையில் ‘Thank you Australia’ எனும் பதாகைகளை ஏந்தியவாறே வந்திருந்தனர். போட்டி முடிந்த பிறகு ‘Australia… Australia…’ என ரசிகர்கள் ஆராவாரம் கிளப்ப ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டனர்.
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மின்வெட்டுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் நாட்டிற்கு வந்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இலங்கை ரசிகர்கள் செய்த மரியாதை அது.
ஆஸ்திரேலியா தொடரை இழந்தது. ஆனால், அதற்காக அவர்கள் பெரிதாக வருந்தியிருக்கமாட்டார்கள்.
என இந்தத் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேசியிருந்தார். சொன்னதைத்தான் செய்துவிட்டார்களே!
இந்தத் தொடர்களின் மூலம் வரும் வருமானத்தில் கணிசமானவை நெருக்கடியைத் தணிக்கும் வகையில் பொதுநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை சிரிக்கிறது. இந்தச் சிரிப்பு களையாமல் தொடர வேண்டும். ஆனால், அது கிரிக்கெட்டர்களின் கையில் மட்டுமே இல்லையே!