புதுடில்லி: உ.பி.,யில் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் மற்றும் அசன்கான் ராஜினாமா செய்த தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பஞ்சாப்பில் 1 மற்றும் உ.பி.,யில் 2 தொகுதிகளுக்கும், டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. உ.பி.,யில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அசம்கார்க் தொகுதி எம்.பி., பதவியை அகிலேஷூம், ராம்கார்க் தொகுதியை அசம்கானும் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கடந்த 23ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது.
அதில், இரண்டு தொகுதிகளையும் அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., கைப்பற்றியது. ராம்பூரில் பா.ஜ., வேட்பாளர் கன்ஷியாம் லோதி 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அசம்கார்க் தொகுதியில் பா.ஜ., வின் தினேஷ் லால் யாதவ் வெற்றி பெற்றார். இது சமாஜ்வாதி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தல்
திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளை பா.ஜ.,வும், ஒரு தொகுதியை காங்கிரசும் கைப்பற்றியது. பர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சகா வெற்றி பெற்று பதவியை தக்க வைத்து கொண்டார்.
டில்லியில் ராஜிவ் சதா, ராஜ்யசபா எம்.பி.,யாக வெற்றி பெற்றதால், அவர் ராஜினாமா செய்த ராஜிந்தர் நகர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆம் ஆத்மியின் துர்கேஷ் பதக் 11 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு 40,319 ஓட்டுகள் கிடைத்தது. எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவுக்கு 28,851 ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளருக்கு 2,014 ஓட்டுகள் மட்டும் கிடைத்தது.
ஆந்திராவில் அமைச்சராக இருந்த மேகபதி கவுதம் ரெட்டி காலமானதை தொடர்ந்து, அட்மகுர் தொகுதிக்கு நடந்த தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவரது சகோதரர் விக்ரம் ரெட்டி வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்டில் மண்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.