கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அன்றுமுதல் பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்புகள் இரு அணிகளாக பிரிந்தது வெட்ட வெளிச்சமானது.
இதில், ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை இரட்டை தலைமை தான் சிறந்தது என்று போர்க்கொடி தூக்க, எடப்பாடி பழனிசாமி தரப்போ ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வருகிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் இணைந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளது.
இதனிடையே கடந்த இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், ஒற்றைத்தலைமைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது.
ஓ பன்னீர்செல்வம் பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேலும் அடுத்த பொதுக்குழு காண தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகின்ற ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், அதனை முடக்குவதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி பயணத்தை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய ஓ பன்னீர்செல்வம், சட்டரீதியான வாதங்களை முன்னெடுப்பதற்காக சட்டவல்லுனர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. வரும் 28 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடனும் ஓபிஎஸ் ஆலோசனை செய்ய உள்ளார்,
வருகின்ற 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்க விடாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓபிஎஸ் தரப்பு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின் தரப்போ., ஓபிஎஸ் திட்டத்தை முறியடிக்கும் வகையில், ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
எது எப்படி ஆனாலும் அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் சமரசம் ஏற்பட்டு, ஒற்றை தலைமையோ, இரட்டை தலைமையும் ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்தால் கட்சி காப்பாற்றப்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.