எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்பதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் செம்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக பணியாற்றியதாக மக்களும் தொண்டர்களும் சொல்கின்றனர் என கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அ.தி.மு.க. இன்று எழுச்சிமிக்க இயக்கமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல், அ.தி.மு.க.வில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அ.தி.மு.க. எழுந்து நிற்பதாக காமராஜ் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் யாரும் தன்னைத்தானே தலைவர்கள் என கூறிக் கொள்வதில்லை, ஒட்டுமொத்த மக்களாளும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் எம்.ஜி.ஆர்., உலக தமிழர்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் ஜெயலலிதா என காமராஜ் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “அ.தி.மு.க.வில் தனக்குப் பிறகு வரப்போகும் தலைவர் யார் என்பதை மக்களும், தொண்டர்களும் தான் முடிவு செய்வார்கள் என ஜெயலலிதா அன்று தெரிவித்த கருத்து இன்று அதிமுகவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி ஒட்டுமொத்த மக்களாலும் இயக்கத்தின் நிர்வாகிகளாலும் போற்றப்படும் தலைவராக உருவாகி வருகிறார்.
ஜெயலலிதா காவிரி உரிமையை மீட்டுத் தந்தது போல் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்’ முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM