கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கல்வி சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளடங்கிய வளர்ச்சியைப் பெற முடியும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அனைத்து இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு சார்பில், ‘காங்கிரஸ் எக்னாமிக் மாடல்’என்னும் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:
31 ஆண்டுகளாக இந்தியா உலகளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 1991-ல் இருந்து இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது.
உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாதார கொள்கை தீர்மானமும் அடங்கும். 1991-ம் ஆண்டு மார்ச்சில் தெளிவாக புதிய பாதை கிடைத்தது.
31 ஆண்டுக்கு பின்னால் பார்த்தால், நாட்டின் எதிர்பார்ப்பு, மாற்றம் தெளிவாக தெரியும். நாடு அடைந்த நன்மைகள் இந்த பாதையில் தெரியும், நாட்டின் வளம், வளர்ச்சி, தனி நபர் வருமானம் அதிகரித்தது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 முறை உயர்ந்தது. 2004,2014-ல் மிக நெருக்கமாக சராசரி வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது. 3 முதல் 4 ஆண்டுகளில் 9 சதவீதத்தை எட்டியது. உலகவங்கி கணக்கின்படி, சுமார் 230 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறினர்.
ராணுவம் என்பது திறனை மேம்படுத்தும் திட்டம் கிடையாது. அக்னி வீரர்களாக வெளியேவருபவர்கள் முடி திருத்துவோர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்பவர்களாக மாற போகிறார்கள்.
எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
8.72 லட்சம் இடங்கள் மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ளன. ஆனால், 10 லட்சம் பணி இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக்கிய இலக்கு இதுதான்.
கல்வி மாநிலப் பட்டியலுக்கு செல்லவேண்டும். கல்விக்காக மாணவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கல்வி,சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளடங்கிய வளர்ச்சியைப் பெற முடியும். தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி அகற்றப்பட வேண்டும்.
அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே அளவீட்டில் குறைந்த தொகையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவ தாகதான் நாங்கள் உருவாக்கினோம். தற்போதுள்ள ஜிஎஸ்டி நாங்கள் உருவாக்கிய ஜிஎஸ்டி கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.