நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவுடன் உறவை மேம்படுத்த உள்ளதாக கைலாசாவில் இருந்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் போலீசார் தேடப்பட்டு வரும் நி்த்யானந்தா நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார்.தற்போது சர்வதேச போலீசாரால் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவரான அவர் கைலாசா என்ற குட்டித் தீவை உருவாக்கி அங்கு தனி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். இந்த தீவு ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது.
நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து அண்மையில் பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், கைலாசாவில் இருந்து தற்போது அதிரடியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
‘கலாச்சார புரிதல், மத சுதந்திரம், பசியை ஒழித்தல், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றின்கீழ் இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசாவுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருக்கிறோம்’ என்று கைலாசா தேசத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானா நாட்டில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர் என்பதும், எப்புடு மாவட்டம் கானாவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள 22 மாவட்டங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.