ஸ்ரீநகர்-‘ஜம்மு – காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தானிலிருந்து, ௧௫௦க்கும் அதிகமான பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கின்றனர். மேலும், ௧௧ பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ௭௦௦ பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஊடுருவலை முறியடிக்க, பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்’ என, நம் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ௨௦1௯ ஆகஸ்ட் ௫ல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதன் பின், ராணுவம் மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகளால், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டது. எனினும், சமீபகாலமாக காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ, பாகிஸ்தான் எல்லைக்குள் ௧௫௦க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். மேலும், எல்லையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மன்ஷேரா, கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில், 11 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், 500 – 700 பயங்கரவாதிகள் வரை பயிற்சி பெற்று வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் பயங்கரவாதிகள் யாரும், நம் எல்லைக்குள் நுழையவில்லை.
எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியை, பாதுகாப்பு படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்யும் வழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எல்லை பகுதியில் உள்ள வேலி பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை தவிர்த்து, மற்ற பகுதிகள் வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் இந்த முயற்சியை முறியடிக்க, பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் கடந்த ௪௦ நாட்களில், ௫௦க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழிப்பது என்பது எளிதல்ல. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை அனைத்து மக்களும் நிறுத்திவிட்டால், பயங்கரவாதிகளை ஒழித்து, பயங்கரவாத பிரச்னைக்கு முழுமையாக முடிவு கட்டிவிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதம் வேண்டாம்
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி நேற்று கூறியதாவது:காஷ்மீரில் சமீபகாலமாக தினமும் மூன்று அல்லது நான்கு இளைஞர்கள், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டு வருவதை பார்த்து வருத்தமாக உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கருதுகிறேன். பயங்கரவாதத்தை கைவிட்டு, உயிர்களை காப்பாற்றிக் கொள்ளுமாறு இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். அவர்களை பாதுகாப்பதில், பெற்றோருக்கும் முக்கிய பங்கு உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற பெயரில் இளைஞர்களை கொல்வதால், பாதுகாப்பு படையினருக்கு ஊக்கத்தொகையும், பதவி உயர்வும் கிடைக்கிறது.காஷ்மீரின் நிலை தற்போது கொந்தளிப்பாக உள்ளது. அமைதி திரும்பும் போது, இளைஞர்கள் தேவை. அதனால், ஆயுதங்களை கையில் எடுத்து, பாதுகாப்பு படையினருக்கு பலியாக வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
பண்டிட்கள் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் பல்வேறு துறைகளில், ௪,௦௦௦க்கும் அதிகமான பண்டிட்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக பயங்கரவாதிகள், முஸ்லிம் அல்லாதவர்களை சுட்டுக் கொன்று வருகின்றனர். இதையடுத்து, பண்டிட்கள் பலரும் காஷ்மீரிலிருந்து ஜம்முவுக்கு திரும்பிவிட்டனர். அவர்களை காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்முவில் பண்டிட்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.