கிளறிய வீரமணி.. பாஜ ஷாக்; அக்னிபாத்தில் இவ்வளவு ஆபத்து?

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது. இதன் பின்னர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவர்கள் பெருந்தோல்வி அடைந்தது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்பன உள்பட 8 தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவற்றப்பட்டுள்ளன.

ஆதீனங்கள் ஆதீனங்களாக உலவ காரணம் திராவிட இயக்கம் தான். சனாதன தத்துவப்படி ஆதீனங்கள் ஆதீனமாகவே இருக்க முடியாது. அந்த அந்தஸ்தை வாங்கி கொடுத்ததும் திராவிட இயக்கம் தான்.

பாஜக சூழ்ச்சியால் தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே யார் எதிர்கட்சி என்ற போட்டி நிலவி வருகிறது. தற்போது எதிர்கட்சிக்குள் யார் எதிர்கட்சி என்ற போட்டி வரும் அளவுக்கு கட்சியை உடைத்து விட்டார்கள்.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். லேடியா? மோடியா? என்று கேட்ட தலைவியின் கட்சியில் தலைவியை மறந்து விட்டு தற்போது யார் தலைவர்? என போட்டி போட்டுக்கொண்டு உள்ளார்கள்.

யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்க வேண்டும். அதிமுக அடமான திமுகவாக உள்ளது. தற்போது அண்ணா திமுகவாக இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய கொள்கை உறுதியை இப்போது உள்ள நிர்வாகிகளும் காட்ட வேண்டும். கவலையோடு சொல்கிறேன். நல்ல இயக்கமான அதிமுக கொள்கையை முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொண்டதால் தற்போது கட்சி இந்த நிலைக்கு வந்துவிட்டது.

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தை மட்டும் பார்க்காமல் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்கும் வழியை அதிமுகவினர் இனியாவது பார்க்க வேண்டும்.

அக்னிபத்தால் இளைஞர்கள் அக்னிபாத்தில் உள்ளார்கள்.15 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பின்னர் ஒய்வு இது தான் நடைமுறை. அதை மாற்ற கூடாது. ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞன் வேலை இல்லாமல் இருந்தால் பயங்கரவாதியாக மாறும் நிலை ஏற்படும்.

பாஜக எந்த திட்டம் அறிவித்தாலும் மறைவான விசயம் உண்டு, திராவிடம் தான் நம் இனம் அடையாளம். அந்த அடையாளத்தை போக்க நினைக்கிறார்கள். ஆளுநர் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுகிறார்.

ஆளுநர் ஓய்வு பெற்ற பின்பு இது போன்று பேசலாம். இங்கு பேச கூடாது. அவர் அரசு அதிகாரி. அரசியல் அமைப்பு சட்டப்படி உறுதி மொழி எடுத்த பின்பு ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

மக்களிடையே பேதத்தை உருவாக்குவது ஆரிய மாடல். திராவிட மாடலுடன் மோதலாம் என யாராவது மோதினால் இது இரும்பு கோட்டை. மோதினால் உங்கள் மண்டை உடையும். இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.