புதுடெல்லி: ‘குஜராத் கலவர வழக்கில் கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டின் வலியை பிரதமர் மோடி 19 ஆண்டுகளாக மவுனமாக தாங்கி கொண்டிருந்தார்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவர வழக்கில், அப்போது இம்மாநில முதல்வராக இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கூறியதாவது:குஜராத் கலவர வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை, பிரதமர் மோடி கடந்த 19 ஆண்டுகளாக மவுனமாக தாங்கிக் கொண்டிருந்தார். அவர் அனுபவித்த வலியை அருகில் இருந்து பார்த்தவன் நான். உண்மை அவர் பக்கம் இருந்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருந்ததால், அது பற்றி பேசாமல் அமைதி காத்தார். பலமான இதயத்தை கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி செய்ய முடியும். அரசியல் சட்டத்தை ஒரு தலைவர் எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் மோடி சிறந்த உதாரணம். இந்த வழக்கு தொடர்பாக மோடியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து பாஜ.வினர் போராட்டம் நடத்தவில்லை (ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது காங்கிரசார் போராட்டம் நடத்தியதை அமித்ஷா மறைமுகமாக குறிப்பிட்டு, இந்த கருத்தை தெரிவித்தார்). இவ்வாறு அவர் கூறினார்.வெளிநாட்டு பயணத்தில் 15 நிகழ்ச்சியில் பங்கேற்புஜெர்மனியில் இன்றும் நாளையும் ஜி-7 நாடுகளின் மாநாடு நடக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக நேற்று அவர் புறப்பட்டு சென்றார். ஜெர்மனியில் 2 நாள் தங்கும் மோடி, 28ம் தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் செல்கிறார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘2 நாடுகளிலும் 60 மணி நேரம் தங்கியிருக்கும் மோடி, 15 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 12 நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். மூனிச் நகரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்,’ எனவ தெரிவித்தனர்.