நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா கலைஞர் சவாலை ஏற்று களம் இறங்கிய நாகர்கோவில் இளைஞர் ஒருவர் 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சில தினங்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு கலைஞரான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 80 கிலோ எடை கொண்ட பெரிய இரும்பு உருண்டையை ஒற்றை கைகளால் தூக்கி சாதனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இந்த சாகசம் செய்து கொண்டிருந்த அந்த ஆப்ரிக்க கலைஞர், தன் கையில் மைக்கை வைத்துக்கொண்டு, இந்த 80 கிலோ இரும்பு உருண்டையை உங்களில் யாராவது ஒருவர் தலைக்கு மேல் ஒற்றை கையால் தூக்க முடியுமா? என மைக்கில் சவால் விடுத்தார்.
எல்லோரும் தவித்து நிற்க, கூட்டத்திலிருந்து, குமரி மண்ணின் மைந்தரான கண்ணன் என்பவர் மேடைக்கு சென்று சவாலை எதிர்கொள்ள தயார் என்று நின்றார்.
வார்ம் அப் செய்த படி அங்கிருந்த 80 கிலோ எடை கொண்ட இரும்பு உருண்டையை ஒற்றை கையால் தனது தலைக்கு மேல் தூக்கி சாதனை படைத்தார்.
சவாலில் வென்ற கண்ணனை ஆப்பிரிக்க கலைஞர் தட்டிக்கொடுத்து பாராட்டினார். சர்க்கஸை காண வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் கண்ணனுக்கு கரகோஷம் எழுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சர்க்கஸ் முடியும் நாளில் மீண்டும் இந்த இரும்புக் குண்டை தூக்கப்போவதாக கண்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார். சவாலை சாதித்துக்காட்டிய கண்ணனின் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது.
தமிழனின் வீரம் எந்நாட்டவருக்கும் சளைத்தது அல்ல என்பதற்கு இந்த சம்பவம் நிகழ்கால உதாரணம்.