புதுடெல்லி: மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து சூழந்துள்ள நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகி குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் வாய்ப்பிருப்பதாக சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நிலவுகிறது. இதன் மேலவைக்கு கடந்த ஜூன் 20-ல் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கூட்டணி ஒரு உறுப்பினருக்கான வாய்ப்பை இழந்தது. இதற்கு முன் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலிலும் சில சிவசேனா, சிறிய கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்தனர். அப்போது முதல் துவங்கிய பிரச்சினை சிவசேனா அரசை கவிழும் சூழலுக்கு தள்ளிவிட்டது.
சிவசேனாவின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் அரசை கவிழ்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதை தடுத்து தம் அரசை காக்கும் முயற்சியில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இறங்கியுள்ளார்.
இவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியின் தலைவரான சரத் பவாரும் உள்ளார். இதில் அவர், சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம் எனவும் கூறி இருந்தார். இதை தொடர்ந்து மத்திய, மாநில அமைச்சர்களின் வன்முறைக் கருத்துகள் வெளியாகின.
சரத் பவாரை மிரட்டும் வகையில் பேசிய மத்திய சிறு குறு தொழில்துறை அமைச்சரான நாராயண் ரானே, ‘ஆட்சியை காக்க முயன்றால் சரத் பவார் தன் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது’ எனத் தெரிவித்தார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சிவசேனாவின் மூத்த தலைவரும் மின்துறை அமைச்சருமான நிதின் ராவத் கூறும்போது, ‘ஆட்சிக்கு எதுவும் ஆபத்து நேர்ந்தால் மும்பை கலவரத்தில் மூழ்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களது இந்த வன்முறைக் கருத்துகளால், சிவசேனா ஆட்சி கவிழ்ந்த பின், குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் என சர்ச்சை எழுந்துள்ளது.
கலவரம் ஏற்படும் அச்சம்
இதையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு சிவசேனா கட்சியினர் மாநிலம் முழுவதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதும் காரணமாகும். இவர்களது ஆர்ப்பாட்டங்களில் கலவரம் மூளும் வாய்ப்புகள் இருக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
ஏனெனில், மும்பை மற்றும் புனேவிலுள்ள சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலரது அலுவலகங்களில் சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தநிலை, ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் மேலும் தீவிரமாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் அச்சமும் உருவாகி உள்ளது. இதை காரணமாக்கி மத்திய அரசால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.
எனினும், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆட்சி மேலும் சில நாட்கள் தொடர்வதில் சிக்கல்கள் இருக்காது எனக் கருதப்படுகிறது. இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கொசாரியா ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதே காரணம். இதில் ஆளுநர் கோஷ்யாரி மும்பையின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.