லட்சத்தீவுகள்: யூனியன் பிரதேசமான லட்சத் தீவிலிருந்து இலங்கைக்கு சூரை மீன்கள் ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய புலனாய்வு குழுவினர் (சிபிஐ) மற்றும் லட்சத்தீவு கண்காணிப்பு அதிகாரிகள் 25 பேர் அடங்கிய குழு விசாரணையை தீவிரப்படுத்தியது. லட்சத்தீவு கூட்டுறவு சந்தை சம்மேளன (எல்சிஎம்எப்) பணியாளர்கள் சிலர் அரசியல்வாதிகள் மற்றும் அரசு பணியாளர்களின் உதவியோடு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் கூட்டுறவு அமைப்புக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ தனது விசாரணையில் குறிப்பிட்டுள்ளது. உரிய ஏற்றுமதி வழிமுறைகளை பின்பற்றாமல் எஸ்ஆர்டி ஜெனரல் மெர்சன்ட்ஸ் நிறுவனம் மூலமாக இலங்கைக்கு சூரை மீன்களை ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
எம்பி முகமது பைசலின் செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர் மீனவர்களிடம் பெருமளவில் சூரை மீன்களை எல்சிஎம்எப் வாங்கியுள்ளது. இவ்விதம் வாங்கப்பட்ட மீன்கள் எல்சிஎம்எப் மூலமாக எஸ்ஆர்டி ஜெனரல் மெர்சன்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் இதற்கு எவ்வித தொகையையும் அளிக்கவில்லை. இதனால் கூட்டுறவு சம்மேளனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எஸ்ஆர்டி நிறுவனத்தின் பின்புலத்தில் பைசலின் மைத்துனர் ரஸாக் இடம் பெற்றுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.