புதுடெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது ஜி7 அமைப்பு. இதன் 48-வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்துகிறது. இந்த மாநாடு ஸ்க்லாஸ் எல்மாவ் நகரில் இன்று (ஜூன் 26) முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்கிறார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செயலர் வினய் மோகன் க்வத்ரா கூறும்போது, “பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அத்துடன் ஜி7 உறுப்பு நாடுகள் மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்” என்றார்.
ஜி7 உச்சி மாநாட்டில் நாளை நடைபெறும் 2 அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில், முதல் அமர்வில் காலநிலை, எரிசக்தி மற்றும் சுகாதாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 2-வது அமர்வில் உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யுஏஇ பயணம்
மேலும், முனிச் நகரில் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச உள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) செல்லும் பிரதமர் மோடி, சமீபத்தில் காலமான அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நயனுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
மேலும், யுஏஇ புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்த 60 மணி நேர வெளிநாட்டுப் பயணத்தின்போது, பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களை சந்திப்பதுடன், 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 நாள் பயணத்தை முடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி 28-ம் தேதி இரவு நாடு திரும்புகிறார்.