இந்திய நிகழ்வுகள்
குஜராத் கலவர வழக்குசமூக ஆர்வலர் கைது
மும்பை-குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் கீழ், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் நேற்று கைது செய்யப்பட்டார்.குஜராத்தில், ௨௦௦௨ல் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார்.இதில், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது. இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்த மனு தள்ளுபடியானதையடுத்து, ஜாகியா குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து ஜாகியா, 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘சிலருக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த வழக்கை தீஸ்தா செதல்வாட் பயன்படுத்தியுள்ளார். ‘அவர் ஜாகியா ஜாப்ரியின் உணர்வோடு விளையாடியுள்ளார். இந்த பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்’ என, கூறியது இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில், தீஸ்தாவை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், மும்பையில் நேற்று கைது செய்தனர்.
குதிப்பதாக மிரட்டிய நோயாளி கீழே விழுந்து பலத்த காயம்
கோல்கட்டா-கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையின், ஏழாவது மாடியின் ஜன்னலுக்கு அருகே உள்ள விளிம்பில் நின்று குதிப்பதாக மிரட்டிய நோயாளி, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
ஜன்னல் வழி
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுஜித் அதிகாரி என்பவர் நரம்பு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவமனையின் ஏழாவது மாடியில் உள்ள அறையில் இருந்த அவர், நேற்று மதியம் திடீரென ஜன்னல் வழியாக வெளியேறினார். அங்கு அலங்காரத்துக்காக கட்டப்பட்டிருந்த விளிம்பின் மீது நின்று கொண்டு, கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார்.அவரை சமாதானப்படுத்த அவருடைய குடும்பத்தார், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் முயன்றனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அவருடன் பேசி திசை திருப்ப முயன்றனர்.இதற்கிடையே, அந்த விளிம்பின் மீது நின்றிருந்த அவர் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்தார். கீழ் மாடிகளில் இருந்த விளிம்புகளின் மீது மோதி தரையில் விழுந்தார்.
விசாரணை
இதில் அவருடைய தலை, முதுகெலும்பு, கை, கால் எலும்புகள் முறிந்துள்ளன. பலத்த காயமடைந்த அவருடைய நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. எதற்காக அவர் ஜன்னலில் இருந்து கீழே குதிக்க முயன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழக நிகழ்வுகள்
மனைவியை கொலை செய்த கணவன் கைது
விருத்தாசலம்-மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 32; கொத்தனார். இவருக்கும், கம்மாபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, 25, என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு துவக்க பள்ளி சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். இருவரும் கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர்.குழந்தை இல்லாததால், இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று ஏற்பட்ட பிரச்னையில், ஆத்திரமடைந்த நாகராஜ், கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜலட்சுமி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நாகராஜ் சரணடைந்தார்.போலீசார் வழக்குப் பதிந்து, நாகராஜை கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாடுகள் பலி
வேலுார்,-வேலுார் மாவட்டம், கணியம்பாடி அருகே புதுாரை சேர்ந்தவர் சின்னபையன், 45, விவசாயி; நேற்று காலை அதே பகுதியிலுள்ள ஏரிக்கரையில் புல்மேய்ந்து கொண்டிருந்த அவரது இரண்டு பசு மாடுகள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பலியாகின. வேலுார் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அங்குள்ள விவசாயிகள் சிலரது மாந்தோப்பில், பசு மாடுகள் மேய்ந்து நாசம் செய்ததால், அதை தடுக்க நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகளை சிலர் நிலத்தில் புதைத்து வைத்திருந்தது தெரிந்தது.
மேலும், மாடுகள் மேய்ந்தபோது அவற்றை கடித்ததில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பசுமாடுகள் இறந்ததும் தெரிய வந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்குவாரியில் மூழ்கி 2 மாணவியர் பலி
துாத்துக்குடி,-கோவில்பட்டி அருகே, கல் குவாரி நீரில் மூழ்கி மாணவியர் இருவர் பலியாகினர்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, லிங்கம்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் மதன்; பெயின்டர். இவரது மகள் வைஷ்ணவி, 16; அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று இவரது வீட்டுக்கு, கோவில்பட்டி, வக்கீல் தெருவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஷகிலா, ஏழாம் வகுப்பு மாணவி ஜன்னத் அர்ஷ்யா, 12, வந்திருந்தனர்.அங்கு பயன்பாடின்றி உள்ள கல் குவாரியில் தேங்கிய நீரில், வைஷ்ணவி, ஜன்னத் அர்ஷியா குளித்தனர். ஆழமான பகுதியில் சிக்கிய இருவரும், நீரில் மூழ்கி பலியாகினர். தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடல்களையும்மீட்டனர். நாலாட்டின்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தங்கை தோழியிடம் கைவரிசை: சில்மிஷ அண்ணனுக்கு காப்பு
புதுக்கோட்டை,-கீரனுார் அருகே, தங்கையின் தோழிக்கு, குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே சூசைப்புடையான்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சிவா, 29; திருமணமானவர்; இரு குழந்தைகள் உள்ளனர். சிவாவின் தங்கைக்கு, நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.கரூரைச் சேர்ந்த, 19 வயது பெண்ணான தங்கையின் தோழி, திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த சிவா, அந்த பெண்ணை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.சிவாவின் பிடியிலிருந்து தப்பிய அந்தப் பெண், உறவினரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவர்கள் கொடுத்த புகார்படி, கீரனுார் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு, சிவாவை கைது செய்தனர்.
தண்டவாளத்தில் கல் வைத்தவர் தப்பி ஓட்டம்
தேனி -ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த நபரை ஊழியர் பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார்.
மதுரை – தேனி அகலப்பாதை பணிகள் முடிந்து 11 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கி உள்ளது. மதுரை – தேனி இடையே ரயில் வேகம் குறைத்து 75 கி.மீ. துாரத்தை ஒருமணி நேரம் 35 நிமிடத்தில் சென்றடைகிறது.இப்பாதையில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா, அகலப்பாதையில் மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடப்பதாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் ரயில் இயக்குவது சவாலாக உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதனால் ஊழியர்கள் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 2:55 மணிக்கு ஆண்டிபட்டி ஸ்டேஷன் அருகே ஆண்டிபட்டி — உசிலம்பட்டி செல்லும் ரயில் பாதையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார். இதை பார்த்த ரயில்வே ஊழியர் அவரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.