சென்னை: அதிமுகவைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, அவரது ஆதரவாளரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் பதவி காலாவதியாகிவிட்டதாக சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை யாராலும் ரத்து செய்ய முடியாது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதால், கட்சியின் அனைத்து நிலை பதவிகளும் காலாவதியாகிவிட்டன. கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது. அவர் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூடும் என்ற அறிவித்ததும் செல்லாது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பணியாற்றிய மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, கடந்த ஆட்சியில் பழனிசாமி அமைச்சரவையில் இருந்தவர்களைக் கொண்டு கட்சியை கம்பெனிபோல நடத்தி, அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வத்துடன்தான் உள்ளனர்.
முதல்வர் பதவியைப் பெற சசிகலா வேண்டும். பதவியைத் தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ் வேண்டும். ஆனால், இப்போது யாரும் தேவையில்லை என்கின்றனர். அதிமுகவில் துரோகம் செய்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
அரசியல் நாகரிகம், பண்பாடு தெரியாதவர்கள், அராஜகத்தில் ஈடுபடுவோர் ஆகியோர் மக்களுக்கு எப்படித் தொண்டாற்ற முடியும். ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெறும் என்பது, வெறும் கனவாகவே இருக்கும். அதிமுகவை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. கட்சியைப் பாதுகாக்க ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். ஓபிஎஸ் இருக்கும் வரை பழனிசாமியின் வேலைகள் பலிக்காது. இனி அவர் துணிந்து செயல்படுவார்.
கட்சியே ஓபிஎஸ் தலைமையில் இருக்கிறது. அதனால், ஓபிஎஸ் டெல்லி பயணத்தின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க அவசியம் ஏற்படவில்லை.
மாவட்டச் செயலர்கள் முறைகேடான நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் விசாரணையில் உள்ளது. விதிகளை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலர் பதவிகள் விரைவில் ரத்து செய்யப்படும்.