தமிழ் சினிமா எங்கேயோ போய் விட்டது! காலரை துாக்குகிறார் இயக்குனர் கஸ்துாரி ராஜா

'பஞ்சு மிட்டாய் சீலை கட்டி, பட்டு வண்ண ரவிக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே…' 1997ல், தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டம் போட வைத்த பாடல். என் ராசாவின் மனசிலே படம் மூலம், இயக்குனராக அறிமுகமானவர் கஸ்துாரி ராஜா. மண் மணம் மாறாமல், அவர் இயக்கிய பல கிராமியப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, வீரத்தாலாட்டு, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆசை ராசாவே உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி, கிராமிய வாசனையை தமிழ் திரையுலகுக்கு வழங்கியவர்களில் இவரும் ஒருவர்.

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, சமீபத்தில் கோவை வந்திருந்த அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
இப்போதைய தமிழ் திரைப்படங்கள் குறித்து?
தொழில்நுட்பத்தின் புரட்சியை, தமிழ் திரைப்படங்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி வருகின்றன. தமிழ் படங்களில் பல்வேறு புதிய பரிணாமங்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இங்கும் வந்துள்ளன. தமிழ் சினிமா உலகளாவிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.

ஆனாலும், ஆங்கிலப்படங்களுக்கு இணையாக வரவில்லை என்ற கருத்து நிலவுகிறதே?
ஆங்கிலப்படங்களுக்கு இணையாக, தமிழ் படங்களும் இங்கு எடுக்கப்படுகின்றன. அறிவில் அவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், நிதி என்று வரும் போதுதான் நமக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஆங்கிலப் படங்களில் பயன்படுத்தப்படும், பல்வேறு தொழில்நுட்பங்களை இயக்குனர் மணிரத்னம், சங்கர் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றனர். தற்போது வெளிவரும் பல படங்கள் அதை நிரூபிக்கின்றன. பாகுபலி, கே.ஜி.எப்., உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம். ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்களுக்கு, தொழில்நுட்பம் எளிதில் கிடைத்து வருகிறது. ஆங்கிலப்படங்களுக்கு இணையான தரம், தமிழ் படத்திலும் உள்ளது. இது, மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

தற்போது கிராமியப்படங்களுக்கு, முக்கியத்துவம் குறைந்து போனதேன்?
இல்லை. இது தவறான கருத்து. கிராமியப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜெய்பீம், அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல்வேறு கிராமியப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. தமிழனின் இதயம் கிராமிய மணமிக்கது. அது ஒரு போதும் அழியாது, அழிக்கவும் முடியாது. மண் மணக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு அழிவே கிடையாது. இன்றும் கிராமியப்படங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை குறித்து?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். நன்றாக இல்லாத படங்களை தாராளமாக நிராகரிக்கலாம். அது அவர்களின் உரிமை. நல்ல விசயங்களை தேர்ந்தெடுப்பதில், அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாததால், ஒரு சில தவறான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றும் விடுகின்றன. அதை மாற்ற முயல வேண்டும். அவ்வாறு செய்தால் திரையுலகம் வெற்றிப்பாதையில் என்றும் பயணிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.