நான் இயக்குனரின் நாயகன்: நடிகர் வசந்த் ரவி பளிச்
நெல்லை சீமையில் பிறந்து, எம்.பி.பி.எஸ்., படித்து, நடிப்பின் மீதுள்ள தீராத காதலால் நடிகர்கள் அனுபம் கேர், ராஜிவ் மேனன் நடிப்பு பட்டறையில் பயிற்சி பெற்று ‛தரமணி', ‛ராக்கி' படங்களை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிக்க பயணிக்கும் வசந்த் ரவி மனம் திறக்கிறார்…
தற்போதைய தமிழ் சினிமாவின் ரீச்..
கமலின் நடிப்பில் ‛விக்ரம்' ரிலீஸ்க்கு பின் தமிழ் சினிமா பெரிதாக பேசப்படுகிறது. ஓ.டி.டி., வந்ததால் அனைவரும் அனைத்து மொழி படங்களும் பார்க்கிறார்கள். அதனால் ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப்., புஷ்பா என பிற மொழி படங்களை தமிழ் படத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
மீடியம் பட்ஜெட் படங்கள் பேசப்படுகிறதா
பட்ஜெட் படங்கள் ‛விக்ரம்'க்கு இணையாக பேசப்பட வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. ‛தரமணி', ‛ராக்கி' பார்த்தவர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள். தரமணி பெரிய ஹிட் தான். வசூல் குறித்து தெரிவிக்காததால் பேசப்படவில்லை. வசூலை தெரிவிப்பது இன்றைய டிரண்ட் ஆகிவிட்டது.
ராம் இயக்கத்தில் ‛தரமணி'யில் நடித்தது
ராம் இயக்கத்தில் நடிப்பை துவங்கியது பெரிய விஷயம். ஒரு கதையில் நடிக்கலாமா, வேண்டாமா என முடிவெடுக்கும் அனுபவம் கிடைத்தது.
ராமின் எதார்த்தமான கதையுள்ள படங்கள்
‛கற்றது தமிழ்', ‛தங்கமீன்கள்' போல் இதுவரை படம் வரவில்லை. இந்த படங்களின் தாக்கம் எதிர் காலத்தில் வரப்போகும் எதார்த்தமான படங்களில் தெரியும்.
உங்கள் நடிப்பில் அடுத்த படங்கள்
தரமணி, ராக்கி பட கேரக்டர்களை விட வித்தியாசமான கேரக்டர்களில் 2 படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் கொஞ்சம் காமெடியில் கலக்கியுள்ளேன். அடுத்து யாரும் எதிர்பார்க்காத அளவு ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.
நீங்கள் இயக்குனருக்கான கதை நாயகனா
ஆம்… இயக்குனரின் இயக்கம், கதைக்குள் நடிக்கும் நாயகன் தான். ‛ராக்கி' இயக்குனர் அருண் மகேஸ்வரன் காட்சிகளை கூறிவிடுவர். அதை உள்வாங்கி நடித்தேன். இப்படி தான் நடிக்க வேண்டும் என கூறினாலும் நடிப்பேன்.
நடிக்க விரும்பும் கேரக்டர்கள், ரோல் மாடல்
இயக்குனர்கள் யாராவது குமரிக்கண்டம் குறித்து படம் இயக்கினால் நடிக்க விரும்புகிறேன். ஹாலிவுட்டில் வந்த ‛லாட் ஆப் ரிங்ஸ்' போல் பல பார்ட்டுகள் எடுக்கலாம். அப்பா ரவி ரோல் மாடல். அவரிடம் கடின உழைப்பை கற்றேன்.
குரல் சூப்பராக இருக்கிறதே பாடும் வாய்ப்பு
இதுவரை பாடியதில்லை. ‛எந்திரன்' பார்ட் 1 வில்லன் ஓராவின் மகனாக, பார்ட் 2வில் நடித்தவருக்கு டப்பிங் பேசியுள்ளேன். இயக்குனர் ஷங்கர் எப்படியோ என் குரலை கேட்டு பேச வைத்துவிட்டார்.