வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து பக்வந்த் சிங் மான் ராஜினாமா செய்த லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று பஞ்சாப் ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அவர் சங்ரூர் லோக்சபா தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில், ஆளும் ஆம் ஆத்மி சார்பில் குருமயில் சிங், காங்கிரஸ் சார்பில் தல்விர் சிங், பா.ஜ.,வின் கெவல் தில்லன், அகாலி தளத்தின் கமல்தீப் கவுர் ராஜோனா, சிரோண்மணி அகாலி தளம்(அமிர்தசரஸ்) என்ற மற்றொரு கட்சியின் சிம்ரன்ஜித் சிங் மன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூன்26)நடந்தது.
அதில், சிம்ரஜ்ன்ஜித் சிங் மன் 5,800 ஓட்டுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். 2வது இடத்தை ஆம் ஆத்மி, 3வது இடத்தை காங்கிரஸ், 4வது இடத்தை பா.ஜ., வேட்பாளரும், 5வது இடத்தை அகாலிதளமும் பெற்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தது. சங்ரூர் தொகுதியில், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பக்வந்த் மான் 2.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1.10 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதம் கூட நிறைவு பெறாத நிலையில், முதல்வர் ராஜினாமா செய்த தொகுதியில் தோல்வியை சந்தித்தது ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement