Mayilsamy Annadurai explains Madhavan speech about Panjangam: இஸ்ரோ பஞ்சாங்கம் பார்த்து செவ்வாய் கோளுக்கு ராக்கெட் அனுப்பியதாக நடிகர் மாதவன் கூறியது சர்ச்சையான நிலையில், முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருவதோடு, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யவும் செயற்கைகோள்களை அனுப்பி வருகிறது.
இந்தநிலையில், இஸ்ரோ-வில் பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு ராக்கெட்ரி என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. நம்பி நாராயணின் கதாப்பாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: வெற்றிக்கான இரண்டு ரகசியங்கள்; ’கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்ஸ்
இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய மாதவன், கடந்த 2014 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ மங்கள்யான் என்ற ராக்கெட்டை அனுப்பியபோது, பஞ்சாங்கம் பார்த்து, கோள்களில் இருப்பிடம், ஈர்ப்பு விசை, திசைவேகம் உள்ளிட்டவற்றைப் பார்த்து அனுப்பியதாக கூறியது சர்ச்சையானது.
இதனையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, மாதவன் பேசிய கருத்துக்கள் சரிதான், விண்வெளி பயணங்களுக்கு பஞ்சாங்கம் பார்த்து அனுப்புவது உலகளாவிய நடைமுறைதான். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பஞ்சாங்கம் பார்த்து அனுப்புவதில்லை. அறிவியல் பூர்வமாகவே நேரம் குறிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. கோள்களின் இருப்பிடம், கோள்களின் பயணம், பூமியின் இருப்பிடம், பயணம் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக அணுகிய பின்னரே, நேரம் குறிக்கப்படுகிறது என்று கூறினார்.