பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் வசமிருந்த நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்ற பிறகு முதல் அமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றார். அவர் ஏற்கனவே சங்ரூர் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வந்ததால் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வராக பதவியேற்றார். இதனால் சங்ரூர் தொகுதியின் எம்.பி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.
பஞ்சாபில் முதன்முறையாக ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் பெருத்த எதிர்பார்ப்புடன் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி சார்பில் குர்பெயில் சிங், சிரோமணி அகாலி தளம் சார்பில் சிம்ரஞ்சித் சிங், பாஜக சார்பில் கேவல் சிங் தில்லன் ஆகியோர் போட்டியிட்டனர்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சங்ரூர் தொகுதியில் சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் சுக்தேவ் சிங் திண்ட்சாவை 2.11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் முதன்முறையாக வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சங்ரூரில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் கேவல் தில்லானை 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2வது முறையாக வெற்றி பெற்றார் பகவந்த் மான்.
2 முறை தொடர்ந்து வென்ற சங்ரூர் தொகுதி மீண்டும் தங்கள் கட்சிக்கே இடைத்தேர்தலிலும் வசமாகும் என்று காத்திருந்த ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி காத்திருந்தது. துவக்கம் முதலே ஆம் ஆத்மி வேட்பாளருக்கு கடும் சவால் அளித்த சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் சிம்ரஞ்சித் சிங் இறுதியில் 5,822 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை வீழ்த்தினார்.
கடந்த மாதம் குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் ஆதரவையும் சிம்ரன்ஜித் சிங் மான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியின் மீதான அதிருப்தியை ஆம் ஆத்மி இனி உணரும் என சிம்ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM