பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பாகிஸ்தான் மக்களும், இலங்கை மக்களைப் போல அத்தியாவசியத் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, “பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்படி மக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் அரசுக்கு ஏற்படும் இறக்குமதிச் செலவு குறையும்” என பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஷன் இக்பால் கூறியிருந்தார்.
பாகிஸ்தானில் உள்ள உயர்மட்ட கல்வி நிறுவனம், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், பண பற்றாக்குறை உள்ள நாட்டில் தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்கும் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையத்தின் செயல் தலைவர் டாக்டர் ஷைஸ்தா சோஹைல், பொதுத்துறை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த சுற்றறிக்கையில், “உள்ளூர் பானங்களாக ‘லஸ்சி’ மற்றும் ‘சத்து மாவு ‘ போன்றவற்றை குடிக்கும்படி வலியுறுத்த வேண்டும். மேலும் பொது மக்களுக்கு இந்த பானங்கள் தயாரிப்பதில் வருமானம் கிடைக்கும். டீ குடிப்பதை குறைப்பதன் மூலம், தேயிலை இறக்குமதிக்கான செலவு குறைந்து.. நாட்டின் மொத்த இறக்குமதி செலவு குறையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.