சென்னை மாம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் அங்குள்ள கோயில் ஒன்றின் நிர்வாகியாக இருக்கிறார். அவர் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கிருஷ்ண பிரசாத்தின் வழக்கறிஞர் முத்துக்குமார், “கடந்த 2019-ம் ஆண்டு முதல் கிருஷ்ண பிரசாத் நிர்வகிக்கும் கோயிலுக்கு ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வருகிறார். அவர், கிருஷ்ண பிரசாத்திடம், தான் பி.எஸ்.பி.பி-யில் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பெற்றோர்களிடம் பணம் வசூல் செய்து 19 லட்சம் ரூபாயை மதுவந்தியிடம் அவர் இல்லத்தில் வைத்துக் கொடுத்திருக்கிறார்.
நீண்ட நாள்களாக சீட் கிடைக்காததால், 13 லட்சம் ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார். மீதத் தொகை 6 லட்சம் ரூபாயை மதுவந்தியிடம் கேட்டபோது, மார்ச் மாதம் 18-ம் தேதி தி.நகர் பூங்காவுக்கு வரவைத்து, அடியாள்களை வைத்து கிருஷ்ண பிரசாத்தை மதுவந்தி தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாகப் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து மதுவந்தியிடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி புகார் அளித்துள்ளோம்” என்று பேசினார்.
கிருஷ்ண பிரசாத் புகார் முற்றிலும் பொய் என்று மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது கூடிய விரைவில் புகார் அளிக்க உள்ளேன் என்று மதுவந்தி கூறியிருந்தார். இந்நிலையில், அவர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில், “எனது கலைக்குழுவில் கிருஷ்ண பிரசாத் என்பவர் இடம்பெற்றிருந்தார். அவர் சமுதாயத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு பிஎஸ்பிபி-யில் இடம் வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டார். அதன் பேரில் நான் அவர்களைக் கருணை அடிப்படையில் எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளேன்.
கிருஷ்ண பிரசாத் என் பெயரையும், எங்கள் பள்ளி அறக்கட்டளை பெயரையும் தவறாகப் பயன்படுத்தி வெளிநபர்களிடமிருந்து பணம் பெற்றுவிட்டு எங்கள் பள்ளியில் சீட் வாங்கி கொடுப்பதாக மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். போலியாக சில ஆவணங்களைத் தயார் செய்து எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் என்மீது வீண் பழி சுமத்தி வருகிறார். கிருஷ்ண பிரசாத் என்பவரிடமிருந்து நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு பணம் மற்றும் பொருளாக இதுநாள் வரை பெற்றதில்லை. அவர் பெற்ற பணத்துக்கு அவரே பொறுப்பாளர். இதில் அவருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று ஆணித்தரமாக உறுதிப்படக் கூறுகிறேன்” என்று கூறியிருந்தார்.
போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.