இந்தியாவில் புதிய கார்களுக்கு விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு வழங்கப்படும். இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு செய்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் பிரிவு 1ல் உள்ள வாகனங்களுக்கு மட்டும் கார் மதிப்பீடு திட்டம் பொருந்தும். இதன் எடை 3.5 டன்னுக்கு குறைவானதாக இருக்க வேண்டும். மோதல் சோதனைகளில் கார்களின் செயல்பாடுகளை பொருத்து, நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் தொடர்பாக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் 126இ என்ற புதிய விதி ஒன்றை சேர்க்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கீழ்கானும் புதிய விதிகள் சேர்க்கப்படவுள்ளன.
** உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட 3.5 டன்னுக்கும் குறைவான எடை கொண்ட எம்1 வகை மோட்டார் வாகனங்களை அங்கீகரிக்க இது பொருந்தும். இத்தகைய வாகனங்களின் தரம் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இணையானதாக இருக்கும்: குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளுக்கும் அப்பாற்பட்டதாக இது இருக்கும்.
** பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம், அந்த வாகனத்தை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களின் அளவை நுகர்வோருக்கு தெரிவிக்கும் (a) வயது வந்த பயணியருக்கான பாதுகாப்பு (AOP) (b) குழந்தை பயணியருக்கான பாதுகாப்பு (COP) மற்றும் (c) பாதுகாப்பு ஒத்துழைப்பு தொழில்நுட்பங்கள் (SAT) ஆகிய பிரிவுகளில் இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இத்தகைய வாகனங்களுக்கு, வாகன தொழில்தரம் 197-ன் படி, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளில் வழங்கப்பட்ட தர மதிப்பெண் அடிப்படையில், ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை நட்சத்திர குறியீடு அளிக்கப்படும்.
** இந்த திட்டத்திற்கான வாகன பரிசோதனை, தேவையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட பரிசோதனை முகமைகளில் மேற்கொள்ளப்படும். 1 ஏப்ரல் 2023 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டம் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.