புதுச்சேரி: நீதிமன்ற கட்டணம் இல்லாமல் மக்கள் நீதிமன்றத்தில் விரைவாக நீதி கிடைக்கும். இத்தீர்ப்பானது மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தெரிவித்தார்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாஹே, ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் ராஜா புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி வைத்தார். ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார், தலைமை நீதிபதி செல்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நிலுவை, நேரடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்கு கள், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன், மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்றம், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகள், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்காலில் 3 அமர்வுகள், மாகியில் 2, ஏனாமில் 1 என மொத்தம் 16 அமர்வுகள் செயல்பட்டது.
இதுபற்றி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான ராஜா கூறுகையில், “நீதியை காலதாமதம் இல்லாமல் வழங்கவே மக்கள் நீதிமன்றம் உருவாகியது. மக்கள் நீதிமன்றத்துக்கு வந்து நீதி கேட்பவர்கள் நீதிமன்ற கட்டணம் அளிக்கவேண்டியதில்லை. நீதிமன்றம் கேட்டு வழக்குபோடுபவர்கள், நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ரூ.1 கோடி கடனாக தந்து பெற முடியாதோர் வழக்கு தொடர்ந்தால் ரூ. 7 லட்சம் நீதிமன்றம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மக்கள் நீதிமன்றம் முன்பு வந்து நீதிகேட்டால், நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நீதிமன்றத்தில் தாக்கலாகி மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் ஏற்கெனவே செலுத்தியிருந்த நீதிமன்ற கட்டணத்தை திரும்பபெறலாம். நீண்ட ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. நீதிமன்ற கட்டணமே இல்லாமல் விரைவாக நீதி கிடைக்கும். தீர்ப்புகள் மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படாது” என்று குறிப்பிட்டார்.