புதுச்சேரியில் போதிய மாணவர்கள் இல்லாமல் பெயரளவில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கூடத்தை உயர்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் அனுப்பியிருக்கிறார் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி. அது குறித்து நம்மிடம் பேசிய ரகுபதி, “புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செயல்பட்டுவரும் பாரதியார் அரசு பல்கலைக்கூடத்தின் நிலை குறித்து RTI மூலம் தகவல்கள் கேட்டிருந்தேன்.
அதனடிப்படையில் அவர்கள் அனுப்பிய தகவலில் 1987-ம் ஆண்டு முதல் கடந்த 35 ஆண்டுகளாக இந்த பல்கலைக்கூடம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு இசை, நடனம், காட்சி கலைகள் உள்ளிட்ட கலைப்பிரிவுகள் பயிற்றுவிப்பதாகவும், அந்த மூன்று கலைப்பிரிவிலும் நடப்பு கல்வியாண்டில் 46 மாணவர்கள் மட்டுமே பயில்வதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும் அந்த மூன்று கலைப்பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் 20, நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் 21 பேர், பிற ஊழியர்கள் 6 பேர் என 46 பேர் என பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.35,56,026/- லட்சம் என ஆண்டிற்கு ரூ.4,26,72,312/- கோடி செலவிட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
ஆண்டிற்கு சுமார் 4.30 கோடி ரூபாய் செலவிட்டாலும், அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அளவில்தான் ஊழியர்களும் இருக்கின்றனர். குறிப்பாக காட்சி கலைகளை (Visual Arts) தவிர்த்து மற்ற இரு கலைப்பிரிவுகளான இசை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் கடந்த 4 ஆண்டுகளாக ஒற்றை இலக்கு மாணவர்களே பயின்று வந்திருக்கின்றனர். அதன்மூலம் இந்த பல்கலைக்கூடம் பெயரளவில்தான் செயல்பட்டு வருகிறது என்று நமக்கு தெரியவருகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக பல்கலைக்கூடத்திற்கு யார் முதல்வராக வேண்டும் என்கிற அதிகாரப் போட்டியில்தான் இவர்கள் தீவிர கவனத்தை செலுத்தி வந்திருக்கிறார்களே தவிர, பல்கலைக்கூடத்திற்கு மாணவர்கள் சேர்க்கைக்கோ, பல்கலைக்கூட கட்டடம் மற்றும் வளாகத்தினை சீரமைக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பல்கலைக்கூட வளாகத்தை பயனற்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கும் குப்பைக்கூடமாக மாற்றிவிட்டனர்.
இதே நிலை நீடித்தால் இந்த பல்கலைக்கூடத்தில் மாணவர்களே இல்லாமல் ஊழியர்கள் மட்டுமே பணிபுரியும் நிலை ஏற்படும். மேலும் இங்கு பயிற்றுவிக்கும் கலைகளை பயில கல்வித் தகுதியோ அல்லது வயது வரம்போ முக்கியமில்லை. கலைஞானமும், கலையின் மீது ஆர்வமும் இருந்தால் மட்டுமே போதும் எவரும் இந்த கலைப்பிரிவுகளில் படித்து சாதனை படைக்கலாம்.
அதனை கருத்தில் கொண்டு முழுமையாக பணி செய்யாமல் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கும் விதமாக, வழக்கமான வகுப்புகளைப் போலவே, பகுதிநேர பட்டய பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட வேண்டும். அடிப்படை கல்வித்தகுதியுடன், வயது வரம்பின்றி கலையின் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் அதன் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் புதுச்சேரி அரசின் உயர் கல்வித்துறையுடன் அந்த பல்கலைக்கூடத்தை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.