பூ உதிர்வது, காய்ப்புத் திறன் இல்லாமை; மா சாகுபடியில் வரும் பிரச்சனைகளைச் சரி செய்வது எப்படி?

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மா சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மா

இந்நிலையில் மா மரங்களில் பூ பிடிக்கும்போது பெய்த மழை, போதிய வெயில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் உதிர்ந்து மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தின் பழ அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் முத்துவேல் கூறுகையில், “மா’ ரகத்தைப் பொறுத்து அதன் பருவம் மாறும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்தான் அறுவடைக் காலம். அறுவடை முடிந்த பிறகு விவசாயிகள் தோட்டத்தைப் பராமரிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

அது தவறு. அறுவடை முடிந்த பிறகு மரங்களில் கவாத்து செய்வது அவசியம். கவாத்து செய்யும்போது சூரிய ஒளி மரங்களுக்குள் ஊடுருவும். அதேசமயம் பூச்சிகளின் தாக்கமும் குறைந்துவிடும்.

கவாத்து செய்வது குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அறுவடை முடிந்து ஜூலை மாத கடைசியில் கவாத்து செய்ய வேண்டும். ஏதாவது பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால் அதையும் சரி செய்ய வேண்டும். பூச்சிகளின் தாக்குதல்களுக்கு தகுந்தாற்போல மருந்துகளை நாங்கள் பரிந்துரை செய்வோம். கவாத்து முடிந்தவுடன், மரங்களுக்கு உரம் வைக்க வேண்டும்.

கவாத்து

மரமானது அடுத்த பருவத்துக்கு செப்டம்பர் மாதத்திலேயே தயாராகத் தொடங்கிவிடும். நல்ல வளர்ந்த மரம் என்றால் ஒரு கிலோ தழைச்சத்து, ஒரு கிலோ மணி சத்து, ஒரு கிலோ சாம்பல் சத்து கொடுக்கலாம்.

இது பொதுவான பரிந்துரைதான். இதுவே சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் பரிசோதனை அறிக்கையை கொடுத்தால், தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்தை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுவோம். உதாரணத்துக்கு நிலத்தில் தழைச்சத்து அதிகமாக இருக்கும்போது, உரத்தைப் பயன்படுத்தினால் செடி பூக்காமலே போய்விடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மா விளைச்சல்

அதுபோன்ற இடங்களில் தழைச்சத்துக்கான உரத்தை அரைக்கிலோ போட்டால் போதும். அதையும் பாதியாக பிரித்து, ஆரம்பத்தில் இறுதியில் என இரண்டு பகுதிகளாக பயன்படுத்தலாம்.

மணிச்சத்து, சாம்பல் சத்துக்கான உரங்களை கவாத்து முடித்தவுடனே ஆரம்பத்திலேயே கொடுத்துவிடலாம். பூக்கள் உதிர்வது, பூ பூக்காமல் இருப்பது, காய் பிடிப்புத் திறன் குறைவாக இருப்பது குறித்தும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு மண் பரிசோதனை முக்கியம். ஒரு சில இடங்களில் மண்ணில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கலாம்.

மண்

அமிலகாரத் தன்மை சரியான முறையில் இல்லாமல் இருக்கும். அதையும் சரியாக கவனிக்க வேண்டும். அதேபோல நுண்ணூட்டச்சத்துகள் குறித்தும் கவனிப்பதில்லை. நுண்ணூட்டச்சத்து கொடுப்பதற்கான சரியான நேரம் செப்டம்பர் மாதம்தான்.

மா ரகங்களுக்கு தகுந்தாற் போல நுண்ணூட்டச்சத்து கிடைக்கிறது. நுண்ணூட்டச் சத்து மரத்துக்கு கிடைக்காமல் இருப்பதால்தான் பூ உதிர்வது அதிகமாக இருக்கிறது.

மா மரம்

மேற்சொன்ன விஷயங்களைச் செய்வதன் மூலமாக பூ உதிர்வதைத் தடுக்கலாம். மேலும், இப்படி செய்வதால் ஜனவரி மாதம் மழை பெய்யும்போது காய் பிடிப்புத் திறனும் கூடும். இந்த முறைகளை விவசாயிகள் சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுவாக விவசாயிகள் தண்ணீர் கொடுப்பார்கள். பூச்சித் தாக்குதல், பூஞ்சண தாக்குதல் இருந்தால் மருந்து அடிப்பார்கள். அவ்வளவுதான். மாமரம் ஒரு சென்சிட்டிவ்வான மரம். அதனால் அவற்றை கவனமாகப் பராமரிப்பது அவசியம். பருவத்தில் மழை சரியான அளவு கிடைக்காவிட்டால் கூட பிரச்னைதான்.

மா மகசூல்

பூ பூக்கும் காலத்தில் மழை அதிகமானாலும் பிரச்னை. அந்த காலகட்டத்தில் பூச்சி தாக்குதல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் சரியாக கவனித்து பராமரித்தாலே மகசூல் தானாக அதிகரிக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.