பெங்களூரு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் உடை மற்றும் காலணிகளை ஏலத்தில் விட இந்தியத் தலைமை நீதிபதிக்கும் , கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, இளவரசி, மற்றும் வி. என் சுதாகரன் ஆகியோர் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை 1996ம் ஆண்டு கர்நாடகா நீதிமன்றத்தில் நடைபெற்றது. டிசம்பர் 11, 1996ம் ஆண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து அவரது உடமைகளான 11,344 சேலைகள், 250 சால்வைகள், 750 காலணிகள் பரிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 2003 பெங்களுரூ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நவம்பர் 2003ம் ஆண்டு முதல் பரிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடமைகள் கர்நாடகா கருவூலத்தில் வைக்கப்பட்டு, விதான் சவுதாவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த உடமைகளை ஏலத்தில் விட அனுமதிக்க வேண்டும் என்று நரசிம்ஹ மூர்த்தி என்ற ஆர்வலர் இந்தியத் தலைமை நீதிபதிக்கும் , கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இந்த கோரிக்கை மனுவில் ‘ சுமார் 26 ஆண்டுகள் இந்த உடமைகள் கர்நாடகா அரசு பாதுகாத்து வருகிறது. அதிக நாட்களுக்கு சேலைகள், சால்வைகளை பராமரிக்க முடியாது. அதன் நிறம் மற்றும் துணியின் தன்மை மாறிவிடும். மேலும் இந்த பொருட்கள் எந்தவிதமான ஆதாரமாகவும் செயல்படப்போவதில்லை. பொதுமக்களின் நன்மைக்காக இந்த பொருட்களை ஏலம் விட அனுமதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.