பொது இடத்தில் இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: பட்டியலின மற்றும் பழங்குடியினரை பொது இடத்தில் இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டம் எல்முடியை சேர்ந்தவர் மோகன் (42). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஜெயகுமார் நாயர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் அடித்தளத்தில் வேலை செய்தார். அப்போது ஒப்பந்ததாரர் ரத்தீஷ் ப‌யஸ், ‘இனி இங்கு வேலை செய்யக்கூடாது’ என மோகனிடம் கூறியுள்ளார்.

அதற்கு மோகன், ‘கட்டிட உரிமையாளர் ஜெயகுமார் நாயர் கூறியதாலேயே வேலை செய்கிறேன்’ என பதிலளித்தார். கோபமடைந்த ரத்தீஷ் பயஸ், ‘எனது சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்’ என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாக பிரசன்னா கடந்த 20-ம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

சம்பவம் நடந்த அன்று மோகன் கட்டிடத்தின் அடித்தளத்தில் பணியாற்றியபோது பிற ஊழியர்களோ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நெருக்கமானவர்களோ அங்கு இருக்கவில்லை. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பொது இடத்திலோ, வேறு ஆட்கள் இருக்கும் இடத்திலோ இழிவுபடுத்தினால் மட்டுமே அந்த பிரிவின்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்.

மோகன் தனியாக இருந்தபோது சாதி ரீதியாக இழிவுபடுத்தியதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருத இயலாது. அவரை தாக்கியதற்கான போதுமான ஆதாரங்களும் சமர்ப்பிக் கப்படவில்லை.

பொது இடங்களிலோ, பொதுமக்கள் முன்னிலையிலோ சாதி ரீதியாக‌ இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். எனவே மோகன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.