மதமும், சனாதானமும் வேறு வேறு என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிகப்பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அதே சமயத்தில், அது மிகப்பெரிய ஆபத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த உலகத்தை அழிக்கக்கூடிய சக்தி பல நாடுகளிடம் இருக்கிறது. எனவே தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நாம் முடிவெடுக்க வேண்டும். இந்தியாவை ஆங்கிலேயர்கள் நீண்டகாலமாக ஆட்சி செய்தனர். இதனால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் கலாசார ரீதியாகவும் நாம் பெரிய அளவில் இழந்திருக்கிறோம்.
இந்தியாவை விட்டு ஆங்கிலேயேர்கள் வெளியேறிய பிறகும் கூட, நாட்டு மக்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திரும்பியே இருக்கிறது. அதிலிருந்து மீள வேண்டும் என்றால், நீண்டகாலம் தேவை என மகாத்மா காந்தி ஒரு முறை கூறினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மதச் சார்பின்மைக்கும், வெளியே தற்போது போதிக்கபடும் மதச் சார்பின்மைக்க்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சனாதன தர்மம் குறித்து பேசும்போது அதனை மதத்தோடு ஒப்பிட்டு சிலர் பேசி வருகின்றனர். உண்மையிலேயே, சனாதனமும் மதமும் வேறு வேறு. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கூட அந்த காலத்தில் சனாதனத்தை பின்பற்றி இருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நாடு விழித்து கொண்டுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு என விவேகானந்தர் மற்றும் காந்தியடிகள் கூறிய ஆன்மிக வழியில் நாடு தற்போது சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியுள்ளது.
அனைத்து கடவுகள்களுக்கும் இங்கு இடம் உள்ளது. ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை.அது தர்மமே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM