லாகூர்: கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் தீவிரவாதி சாஜித் மிர்ருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், சாஜித் மிர் என்ற நபரே கிடையாது என்று பாகிஸ்தான் அரசு முதலில் பதிலளித்தது. அதன் பிறகு, அவர் யார் என்று தெரியாது என்று மழுப்பியது. சாஜித் மிர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை இந்தியா அளித்தபோது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று பாகிஸ்தான் அரசு கூறியது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சாஜித் மிர் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீதான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக சாஜித் மிர்ருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒருவர் நேற்று கூறும்போது, “லாகூரில் செயல்படும் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் சாஜித் மிர்ருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.4 லட்சம் அபராதமும் விதித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
தீவிரவாதிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்பது குறித்து எப்ஏடிஎப் அமைப்பு ஆய்வு செய்து கருப்பு, கிரே பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் எப்ஏடிஎப் அமைப்பின் கிரே பட்டியலில் பாகிஸ்தான் நீடிக்கிறது.
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் பெயர் நீக்கப்படும். அதற்காகவே தற்போது சாஜித் மிர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.