வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 19 பேர் கைது

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாட்டில் அவரது அலுவலகம் உள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உள்ளூரை சேர்ந்த இவர்கள் அனைவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த வழக்கில் மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். இதில் கைது எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. விரைவில் இந்த வழக்கு, கூடுதல் டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது” என்றார்.

ராகுல் அலுவலகம் சூறையாடப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், கூடுதல் டிஜிபி தலைமையில் உயர்நிலை விசாரணைக்கு இடதுசாரி அரசு உத்தரவிட்டது. மேலும் கல்பேட்டா டிஎஸ்பி.யை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் முதல்வர் பினராயிக்கு தெரிந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. “இந்த நிலம் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக போராட்டத்துக்கான இடத்தை உறுதி செய்கிறது. ஆனால் அது வன்முறையாக மாறினால் அது தவறான நடைமுறையாகும்” என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சுற்றிலும் ஒரு கி.மீ. தூரத்துக்கு சுற்றுச்சூழல் மண்டலம் ஏற்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக வயநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஊர்வலம் சென்றனர். அப்போது இந்த விவகாரத்தில் ராகுல் அமைதியாக இருப்பதை கண்டித்து ஊர்வலத்தில் சென்றவர்கள் அவரது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.