வருங்காலங்களில் ஆசிரியர்களை தமிழக அரசு கைவிட்டு விடுமோ என்று பயமா இருக்கு – அரசு ஆசிரியர்கள்.!

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “1990 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். 1990-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. 

அதே போன்று 2004-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் பெரியார் திடலில் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை நடத்தியது. 

அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வின் சார்பில் ஆற்காடு வீராச்சாமி மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 01.06.2006 முதல் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்கப்பட்டது என்பது கடந்த கால வரலாறு. 

இவ்வாறு தொகுப்பூதியத்தை ஒழித்து ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய கலைஞரின் வழியில் நடை போடுவதாகக் கூறும் இன்றைய தமிழக அரசு மீண்டும் மதிப்பூதிய நியமனத்தைக் கொண்டு வருவது சிறிதும் பொருத்த மற்றதாக உள்ளது. மேலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட முன்கூட்டியே உரிய நடவடிக்கை மேற் கொண்டிருந்தால் இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டிருக்க முடியும். 

தமிழக அரசின் இந்நடவடிக்கை இனி வருங்காலங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதையே தமிழக அரசு கைவிட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமன அதிகாரம் என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியோ என்ற ஐயத்தையும், எதிர்காலத்தில் பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு வழங்குவதற்கான முன்னோட்டமோ என்ற விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

எனவே, தமிழக அரசு தற்காலிக மதிப்பூதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதைக் கைவிட்டு விரைந்து செயலாற்றி தகுதிவாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.