இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், பெண் காவலரை சக போலீஸ்காரரே பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிடிட்டியுள்ளார். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர, பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, அந்நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் (2015-21) இதுபோன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பெண் கான்ஸ்டபிளை சக கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. மதியாரி நகருக்கு அருகே உள்ள ஹலா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விவரம்: சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட நபருக்கு எதிரான விசாரணை பற்றிய பணிக்காக தனது அரசு இல்லத்திற்கு வரும்படி ஆண் கான்ஸ்டபிள், சக பணியாளரான பெண் கான்ஸ்டபிளை அழைத்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற பெண் கான்ஸ்டபிளிடம் குடிப்பதற்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்து உள்ளார். தேநீரில் மயக்க மருந்து கலக்கப்பட்டு உள்ளது. இதனால், தேநீரை வாங்கி குடித்த அந்த பெண் கான்ஸ்டபிள் மயக்கமடைந்து உள்ளார். இதன்பின்னர், அவரை ஆண் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை பல வீடியோக்களாகவும் எடுத்து வைத்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண் கான்ஸ்டபிள் அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார். இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பியதுடன், தன்னை மிரட்டியும் வருகிறார் என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து யூசுப் பிலால் என்ற அந்த ஆண் கான்ஸ்டபிளை ஹலா போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.