ஓமலூரில் பள்ளி செல்ல மறுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு ஜீவன், கிஷோர், முருகவேல் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்யும் கார்த்திகிற்கும், அவரது மனைவி உமாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், உமா 15 வயதான தனது மூத்த மகன் ஜீவன் என்பவரை தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். ஜீவன் அங்குள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்தாண்டு ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு சேர்ப்பதற்காக அங்கிருந்து மாற்று சான்றிதழை வாங்கி வந்து, வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை உமா செய்து வந்துள்ளார்.
ஆனால், ஜீவன் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என மறுத்துவிட்டு, தன்னை ஐடிஐ-யில் சேர்த்து விடுமாறு தாயிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உனது விருப்பம்போல படி என்று தாய் உமா கூறியதாக கூறப்படுகிறது. இதனால், சோகமாக காணப்பட்ட ஜீவன், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று மாணவனை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஜீவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்ல வேண்டுமென கண்டித்ததால், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஓமலூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ:
“என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்”- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM