தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் என, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 12 பேர் மற்றும் பல்வேறு மீனவர் நலச்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தங்கம் கூறியதாவது:
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், விவரம் தெரியாமல் கலந்து கொண்டேன். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை விற்கப்போவதாக அதன் நிர்வாகம் கடந்த 25-ம் தேதி அறிவித்தது. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளர் கைவிட வேண்டும். ஆலை குறித்த வழக்கில் நல்ல முடிவு நீதிமன்றத்தில் கிடைக்கும். எனவே ஆலையை திறந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும். இவ்வாறு தங்கம் கூறினார்.
ராஜீவ் காந்தி மீனவர் நல பாதுகாப்பு சங்க தலைவர் நிக்கோலாஸ் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை விற்கக் கூடாது என அனைத்து மீனவர் சங்கங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆலை விற்கப்பட்டால் பெரும் சிரமமாகிவிடும். எனவே ஆலையை விற்கக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலையை நடத்த நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருப்போம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்துவோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் பலரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.