புதுடெல்லி: யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 34,615 கோடி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக டிஎச்எப்எல் நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில் வாத்வான், இயக்குநர் தீரஜ் வாத்வான் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதுதான், நாட்டிலேயே சிபிஐ விசாரிக்கும் அதிகபட்ச வங்கி கடன் மோசடி வழக்காகும்.இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டே நேற்று அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடியின் மேற்பார்வையில் இருக்கும் துறையில் மிக பெரிய மோசடி நடந்துள்ளது. டிஎச்எல்எல் நிறுவனம் 17 வங்கிகளில் 34 ஆயிரத்து 615 கோடி மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கும் பாஜ.வுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்த நிறுவனத்திடம் இருந்து தேர்தல் நிதியாக பாஜ ₹27.5 கோடியை வாங்கி உள்ளது,’’ என்றார்.