“கடந்த சில வருடங்களாக வாழ்வியல் நோய்கள் மனிதர்களின் தாம்பத்திய வாழ்க்கையை ஏதோவொரு வகையில் பாதித்துக்கொண்டு இருக்கின்றன. வாழ்வியல் நோய்கள் இல்லாதவர்களும் இன்றைய லைஃப் ஸ்டைல் காரணமாகத் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணத்தைக் கண்டறிந்துவிட்டால் பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்” என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அது பற்றிப் பேச ஆரம்பித்தார்.
“ஐம்பதுகளில் இருக்கிற நபர் ஒருவர், `டாக்டர், நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். எனக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் என்று எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தாம்பத்திய உறவுக்கு முயன்றால் விறைப்புத் தன்மை முழுமையாக வருவதில்லை. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதுகளில் வேலை வேலையென ஓடிவிட்டேன். நேரமும் இளமையும் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்கிற இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறேன். ஆனால், முடியவில்லை. எனக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து ஏதாவது தர முடியுமா’ என்றார்.
விறைப்புத்தன்மை இல்லையென்பது ஆண்மைக் குறைபாடுகளில் ஒன்றுதான். இந்தப் பிரச்னை 40 வயதுகளிலேயே கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேருக்கு வரலாம். 50 மற்றும் 60 வயது ஆண்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினருக்கு விறைப்புத்தன்மை குறைவு ஏற்படலாம். 70-களில் இருக்கிற ஆண்கள் என்றால், 75 சதவிகிதம் வரை ஆண்மைக்குறைபாடு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இவையனைத்தும் உலகம் முழுக்க செய்யப்பட்ட பல ஆய்வுகள் சொல்கிற முடிவுகள்.
வயது செல்லச் செல்ல மனிதர்களுக்கு அதன் காரணமாகவே மன உளைச்சல் ஏற்படும். சிலர், இயல்பிலேயே பதற்றமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அடுத்து, ரத்த நாளங்களில் வரக்கூடிய பிரச்னைகள்… விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதத்தினருக்கு ரத்தநாளக் குறைபாடு இருக்கிறது. மருந்து, மாத்திரைகளால் வருகிற பக்க விளைவுகளாலும் ஆண்மைக்குறைவு வரலாம். நீரிழிவு, தைராய்டு போன்ற வளர்சிதை மாற்றம் காரணமாகவும், நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆண்மைக் குறைபாடு வரலாம்.
40 வயதுக்கு மேல் ஒவ்வொரு வருடமும் 0.2 ng/dL அளவு ஆண் ஹார்மோன் குறைய ஆரம்பிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவிர, ஆணுறுப்பில் வரக்கூடிய பைரோனி நோய், பிராக்சர் ஆஃப் பீனில் (Penile Fractures) ஏற்பட்டிருந்தாலும் விறைப்புத்தன்மையில் பிரச்னை வரும். இத்தனை காரணங்களை நான் அடுக்கினாலும், முழுமையாக சிகிச்சையளித்தால் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்பதுதான் நல்ல செய்தி.
பாலியல் மருத்துவர் மூலம் காரணத்தைக் கண்டறிந்து, மாத்திரைகள், ஷாக் தெரபி, இன்ஜெக்ஷன் என்று சம்பந்தப்பட்டவருக்குத் தேவையான சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள். இவை எதிலும் பிரச்னை சரியாகவில்லை என்றால், ஆணுறுப்பில் அறுவைசிகிச்சை செய்தும் சரி செய்யலாம். நாற்பதென்ன, ஐம்பது, அறுபதுகளிலும் கருத்தரிப்பு முறைகளைப் பின்பற்றி வீட்ல விசேஷம் என்று வாழுங்கள்” என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.