சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதில் பல திட்டங்கள் வெற்றி பெற்ற இருந்தாலும், தோல்வியடைந்த திட்டங்களும் இல்லாமல் இல்லை.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ஆயிரம் கோடிக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் படி நகரின் ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பகுதியாக மாற்றுதல், நகரில் பொதுமக்கள் தொடர்புடைய பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து நடைபாதைகள் அமைத்தல், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
இதன்படி தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை மாநகராட்சி முதன் முதலாக இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நகரம் ஆகும்.
72 திட்டங்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது 7 ஆண்டுகளை நிறை செய்துள்ளது. இந்த 7 ஆண்டுகளில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 490 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 400 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு 72 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 57 திட்டங்கள் நிறைவடைந்துள்ளது. 15 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
மாற்றுத்திறனாளிகள் பூங்கா
முடிவடைந்த திட்டங்களில் மாற்றுத்திறனாகளுக்கான பூங்கா, தெருவிளக்குளை எல்இடி விளக்குகளாக மாற்றுவது, சோலார் மூலம் மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் நல்ல திட்டங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் வகுப்பறைகள், குடிநீர் வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் உள்ளிட்ட திட்டங்களும் நகரை மேம்படுத்த தேவையான திட்டங்களாக பார்க்கப்படுகிறது.
சாலையோர வாகன நிறுத்தம்
ஆனால் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் சைக்கிள் ஷேரிங் திட்டம் மற்றும் சாலையோர வாகன நிறுத்த திட்டங்கள் தோல்வியடைந்த திட்டங்களாக பார்க்கப்படுகிறது. சாலையோர வாகன நிறுத்த திட்டம் மூலம் 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. தற்போது இதை மீண்டும் முழு வேகத்துடன் அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சைக்கிள் ஷேரிங்
சைக்கிள் ஷேரிங் திட்டம் பொதுமக்கள் இடையில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பல இடங்களில் சைக்கிள் சேதமடைந்து உள்ளன. இதைப்போன்று தி.நகரில் அமைக்கப்பட்ட பல்அடுக்க வாகன நிறுத்தத்தை பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்துவது இல்லை. பாலங்களின் சுவர்களில் அமைக்கப்பட்ட செங்குத்து பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
மாம்பலம் கால்வாய்
தி.நகரில் உள்ள மாம்பலம் கால்வாயை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, பணிகளை மேற்கொள்ள ஆணையும் வழங்கப்பட்டது. தற்பேது இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டு புதிய முறையில் மாம்பலம் கால்வாய் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாண்டி பஜாரை நடைபாதை வளாகமாக மாற்றிய திட்டத்தில் பொதுமக்கள் இரு வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் இந்த திட்டம் தேவைதான் என்றும் மற்றொரு தரப்பினர் இது தேவையில்லாத திட்டம் என்று தனது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மழைநீர் வடிகால்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ரூ.200 க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.200 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
விசாரணைக் குழு
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க,ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் படியானதா? திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப்பட்டதா? பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உரிய விதிப்படி வழங்கப்பட்டதா? பணிகளின் தரத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பனவற்றை இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்தக் குழுவின் அறிக்கையை சமர்பிக்கும் போது இந்த ஸ்மார்ட் திட்டம் உண்மையில் நகரை ஸ்மார்ட்டாக மாற்றியதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.