மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்துக்கு வந்திருக்கிறார். நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இ-சஞ்சீவனித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று சைக்கிள் ஓட்டினார். சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் எரிபொருளைச் சேமிக்கிறது என சைக்கிள் ஓட்டுவதன் பயன்பாடுகள் பற்றி இதற்கு முன்னர் மன்சுக் மாண்டவியா பல நிகழ்ச்சிகளில் அறிவறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் , சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய விருந்தினர் மாளிகையில் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான (health India fit india) சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று , மெரினா கடற்கரை சாலையில் 50 பேருடன் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார். மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள மவுன்ட் ரோடு, மந்த்ரம் சிலை சாலை வழியாகச் சென்று அதே தொடக்கப் புள்ளியில் (புதிய விருந்தினர் மாளிகை சேப்பாக்கம் சென்னை) சைக்கிள் ஓட்டுதலை முடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 5 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டிய மாண்டவியாவுடன் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் மற்றும் பாஜக தொண்டர்களும் இந்த சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.