Maamanithan: நிறைவான குடும்ப டிராமாதான்; ஆனால் நம் நெஞ்சங்களில் உயர்ந்து நிற்கிறானா இந்த `மாமனிதன்'?

பேராசையால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதன், ஊருக்குப் பயந்து பரதேசம் சென்று மாமனிதனாகத் திரும்புவதே இந்த `மாமனிதன்’.

ஆட்டோ ஓட்டுநராகச் சுற்றும் ராதா கிருஷ்ணனுக்கு பண்ணைப்புரத்திலுள்ள எல்லோரும் பழக்கம். சொந்த வீடு, மனைவி, மகன், மகள் என்று வாழ்ந்தாலும் பிள்ளைகளை கான்வென்ட்டில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். தெரியாத தொழில் மூலம் அவருக்குச் சிக்கல் ஏற்பட, குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூருக்கு ஓடிப்போகிறார். கேரளா, காசி எனப் பயணப்படும் கதையில், ஓடிப்போன ராதா கிருஷ்ணனின் நோக்கம் என்ன, அவன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தானா என்பதற்கான விடைகளைச் சொல்கிறது ‘மாமனிதன்’.

மாமனிதன்

ஆட்டோ ஓட்டும் ராதா கிருஷ்ணனாக விஜய் சேதுபதி. வழக்கமாக அவர் படங்களில் வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் விஜய் சேதுபதியாகவே படத்தில் உலாவுகிறார் என்பதே. அதை இந்தப் படத்தில் மாற்ற முயற்சி செய்திருக்கிறார். பல காட்சிகளில் ஆட்டோ டிரைவர் ராதா கிருஷ்ணன் மட்டுமே நமக்குத் தெரிகிறார். நாயகியாக காயத்ரி ஷங்கர் பல்வேறு காலகட்டங்களுக்கான நடிப்பை அதற்கேற்ற முதிர்ச்சியுடன் வழங்கியிருக்கிறார். குடும்ப நண்பராக வரும் குரு சோமசுந்தரத்துக்கு ஆழமானதொரு கதாபாத்திரம். திறம்பட நடித்துக் கதை நகர வழிவகுத்திருக்கிறார். துணை நடிகர்களாக வரும் ஜுவல் மேரி, அனிகா, சரவண சக்தி ஆகியோருக்கும் கதையில் முக்கியமான வேடங்கள். ஒரு காட்சியில் வந்தாலும் மறைந்த நடிகை கே.பி.ஏ.சி.இலலிதா நெகிழச் செய்கிறார்.

எளிய மனிதர்களின் கதைகளைப் பெரும்பாலும் கையில் எடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த முறையும் ஒரு சாமானியனின் கதையைத் திரையில் படரவிட்டிருக்கிறார். ‘யாவரும் தூயவர்களே’ பாணியில் நகரும் படம், ஒரு திருப்பத்துக்குப் பிறகுச் சற்றே தன் யதார்த்தத் தன்மையை இழந்து தவிக்கிறது. சென்ற இடத்திலெல்லாம் உதவும் மனிதர்கள், உடன் நிற்கும் அன்பர்கள் என்பது சினிமாவிற்குச் சரியாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் அவ்வளவு நேரம் யதார்த்தம் பேசிய கதைக்கு அது சற்று அந்நியமாகி நிற்கிறது. குறிப்பாக, காசியில் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சியிலும் சினிமாத்தனமே மேலிடுகிறது. பயந்து ஓடிய ஒருவனுக்கு, குறிப்பாகக் குடும்பத்தினரை எள்ளி நகையாடும் கிராம மனிதர்களுக்கு இடையே விட்டுச் சென்ற ஒருவனுக்கு ‘மாமனிதன்’ என்ற பூச்சு வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகச் சற்றே பொருந்தாமல் நிற்கிறது. அதற்கான நியாயங்களையும் அவன் செயலுக்கான காரணங்களையும் இன்னமும் ஆழமாக அணுகியிருக்கலாம்.

மாமனிதன்

இளையராஜா – யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘ஏ ராசா’ பாடல் இன்னமும் நீடித்திருக்கலாமே என்று ஏங்க வைக்கிறது. பின்னணி இசை பல இடங்களில் பழக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றினாலும் காட்சிக்குத் தேவையான எமோஷன்களைக் கச்சிதமாகக் கூட்டியிருக்கிறது. பண்ணைப்புரம், கேரளா, வாரணாசி எனச் சுழலும் சுகுமாரின் கேமரா, அந்தந்த இடங்களின் அழகியலை அற்புதமாகத் திரையில் வடித்திருக்கிறது. “அப்பன் தோத்த ஊர்ல புள்ளைக ஜெயிக்கிறது கஷ்டம்” உள்ளிட்ட வசனங்கள் கதை மாந்தர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கு வலு சேர்க்கின்றன.

மனசாட்சிக்குப் பயந்து வாழ்பவன் `மாமனிதன்’ என்ற கூற்றைக் கடத்த முற்படுகிறது படம். ஆனால், நாயகனின் முடிவுகளுக்கு ஏற்ற நியாயங்களும் கதையிலிருந்திருந்தால், நிச்சயம் இந்த `மாமனிதன்’ இன்னமும் உயர்ந்து நின்றிருப்பான். இருந்தும் ஒரு குடும்பப் படமாக, சக மனிதர்களைக் கொண்டாடும் படமாக, ஒரு ஆர்பாட்டமில்லாத நாவலை வாசித்த உணர்வைத் தருகிறது `மாமனிதன்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.