அக்னிபத் எனும் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்துவருகின்றனர். அக்னிபத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள், ஒப்பந்த முறையில் நான்கு ஆண்டுக்காலம் இதில் பணியாற்றுவர். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டுமே நேரடியாக இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவிகித வீரர்களும் நீக்கப்படுவர்.
அரசியல் கட்சிகள் பலவும், `மீதமுள்ள 75 சதவிகித வீரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்திவருகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்திலன் பர்த்வான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசை அக்னிபத் திட்டம் தொடர்பாக விமர்சித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாகப் பேசிய அவர், “பா.ஜ.க போல அல்லாமல், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அக்னிபத் திட்டத்தில் நான்கு மாதங்கள் பயிற்சி அளித்து, நான்கு ஆண்டுகள் பணியமர்த்துகிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்படாத பயிற்சி பெற்ற வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் கதி என்ன என்பது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். எனவே, அக்னிபத் திட்டத்திலிருந்து ஓய்வுபெறும் வயது 65-ஆக நீட்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
இதற்கு முன்னதாக மம்தா, “ 2024 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு புதிய ஆள்சேர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையிலேயே பா.ஜ.க தனது சொந்த ‘ஆயுதமேந்திய கேடர் தளத்தை’ உருவாக்க இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது” என மத்திய அரசை விமர்சித்திருந்தார்.