நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து வீட்டிலிருந்து பணிப்புரியும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அது நாடு முடக்கப்பட்டதாக அர்த்தமல்ல என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், அவர்கள் அந்தந்தப் பகுதிக்குள் இருப்பதை உறுதி செய்வதுமே இதன் நோக்கமாகும் என்றார்.
கடைகள், மருந்தகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் என்று அமைச்சர் கூறினார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜூலை 10ஆம் திகதிக்கு பின்னர் நிலைமை சீரடையும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை நம்பிக்கையளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ரஷ்யா மற்றும் கட்டார் நாடுகளுடனும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு கோரிக்கை
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10ம் திகதி வரை அதிகாரப்பூர்வமற்ற, பகுதியளவு பூட்டுதலாகக் காணப்படுவதை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகள் ஜூலை 10ம் திகதி வரை மூடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் விருப்பப்படி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.