அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தும் வாகன ஓட்டிகள் மீதும், அதனை பொருத்தி தரும் மெக்கானிக்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் இன்று முதல் வரும் 3-ம் தேதி வரை `ஒலி மாசு’ விழிப்புணர்வு வாரம் தொடங்கி உள்ளனர். வாகனங்களில் தேவையற்ற இடங்களில் ஹாரன்கள் ஒலிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த அந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை, சென்னை அசோக் பில்லர் சிக்னல் அருகில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் துவக்கி வைத்தார்.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஒலிபெருக்கி விழிப்புணர்வு லோகோ மற்றும் விழிப்புணர்வு காணொளியையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது, சென்னை போக்குவரத்துக் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சரத்கர், இணை ஆணையர் ராஜேந்திரன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “சென்னை மாநகரைப் பொருத்தவரை சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் அதிக ஒலி தரக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துகிறார்கள். சென்னை முழுவதும் 50 ஆயிரம் கையொப்பங்கள் மற்றும் 1.5 லட்சம் பேனா மற்றும் காகித கையொப்பங்கள் மற்றும் ஒலி எழுப்பாமல் உறுதிமொழி மேற்கொள்ள உள்ளோம். அவற்றின் அளவு அதிக அளவில் உள்ளது. எனவே அவற்றை குறைக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம்.
விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு பள்ளிகளில் பள்ளி மாணவர்களிடையே வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி உள்ளோம். சென்னையில் உள்ள 100 டிஜிட்டல் பலகைகளுக்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் வழங்கக்கூடிய நேரம் பொறுத்து அதிக ஒழிப்பான் குறித்து விழிப்புணர்வுக்கான வாசகங்களையும் ஒளிபரப்ப உள்ளோம். அதுமட்டுமின்றி சென்னை உள்ள முக்கிய சிக்னல்களில் எல்இடி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள ஒளி அலைகளை அளக்கும் கருவிகளை வாங்கி சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பயன்படுத்த உள்ளோம்” என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குனர் சங்கர சுப்பிரமணியன் பேசுகையில், “இது போன்ற அதிக ஒலி எழுப்பின் காரணமாக பல நபர்களுக்கு தூக்கமின்மை மற்றும் ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கக்கூடும். இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக வாகன ஓட்டிகள் ஒலி எழுப்புதலின் அளவை அதிக அளவில் குறைக்க வேண்டும். குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒரு வாரம் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்களை பயன்படுத்தாமல் இருக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்க விட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ஒலி மாசு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். அதிகளவில் ஹாரன் அடித்து தொந்தரவை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசு ஏற்படுகிறது. சாலை போக்குவரத்தில் ஒழுங்கு முறை வர வேண்டும். ஒலி மாசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் ஓவியப்போட்டிகள் நடத்த உள்ளோம். சென்னையின் 100 சாலைகளில் ஒலி மாசு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். ஒரு வார விழிப்புணர்விற்கு பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் சேர்ந்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு எந்தளவுக்கு கைகொடுத்துள்ளது என்பது தொடர்பாக ஆய்வு நடத்த உள்ளோம்.
இதையும் படிங்க… `பொருளாளர் பதவியை ஓபிஎஸ் விட்டுக் கொடுக்கணும்’-ராஜன் செல்லப்பா
ஒலி மாசு தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குகளை அதிகளவில் பதியவில்லை. இனிமேல் அதிக வழக்கு போட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒலி மாசு கண்டறியவதற்காக நவீன கருவி வாங்க உள்ளோம். தற்போது அதிக ஹாரன் ஒலி எழுப்பியதாக குறித்து ரூ. 100 அபராதம் விதித்து வருகிறோம். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தால் ரூ. 1000, ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சில முக்கிய பகுதிகளில் ஒலி மாசு ஏற்படுத்தக்கூடாது என்பது தொடர்பான நடைமுறை இருக்கிறது. மருத்துவமனைகள், பள்ளிகள் அருகில் அதிக ஹாரன்களை எழுப்பக்கூடாது என்பது விதிமுறை. இதனை பலர் பின்பற்றுவது இல்லை. அதிக ஹாரன் எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய நவீன கருவி வாங்க உள்ளோம். அதனை வாங்கிய பிறகு அபாரதம் விதிக்க உள்ளோம். ஒரு மாதத்திற்கு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி எவ்வளவு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை எடுத்துள்ளோம். தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளோம். போக்குவரத்து கழகம் அதிகளவிலான அபராத தொகையை வசூலிக்க தொடங்கி விட்டார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அபராதம் விதிக்கப்படுவது தொடர்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
அதிக ஹாரன்களை பொருத்தி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம். இது போன்ற அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை தயாரித்து வாகனங்களில் பொருத்தி தரும் மெக்கானிக்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். ஹாரன், சைலென்சர் ஆகியவற்றில் ஒலி மாசு எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதனை ஆய்வு செய்ய உள்ளோம். இதன் பிறகு தான் போக்குவரத்து போலீசார் எந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளனர் என்பது தெரியும். முகக் கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது. தற்போது குறைந்துள்ளது” என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
– செய்தியாளர்: சுப்பிரமணியன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM