அதிமுக கட்சி நாளிதழில் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற பழனிசாமி தரப்பு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜூலை 11-ம் தேதி கட்டாயம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அன்று ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலர் பொறுப்புக்கு பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், ஜூலை 11-ல் பொதுக்குழுவை நடத்த முடியாது, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தங்கள் பக்கம் வந்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை டெல்லியில் இருந்து மதுரை விமானநிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஓபிஎஸ் இன்று தேனியில் இருந்து சென்னை திரும்பி, ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, நாளை (ஜூன் 28) அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்
புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கும் முயற்சியில் பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார்.

நாளேட்டின் நிறுவனர் என்ற பொறுப்பில் நேற்று முன்தினம் வரை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், நேற்றைய நாளிதழில் நிறுவனர் என்ற இடத்தில் பழனிசாமி பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

மேலும், பல்வேறு மாவட்ட அதிமுக அலுவலகங்களில் ஓபிஎஸ் பெயர் மற்றும் படங்கள் அகற்றப்பட்டதாகவும், இதனால் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று தனது ஆதரவு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள முக்கிய நிர்வாகிகளை அவர் அழைத்துள்ளதாகவும், ஆலோசனை நடத்திய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையம் மூலம் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்த விடாமல் முடக்கும் முயற்சியாக, அதற்கான மனுவை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளதால், நடுநிலையாளர்கள் சிலர் இருதரப்பிலும் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று நிர்வாகிகள் கூட்டம்

இதற்கிடையே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன் 27) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கட்சியின் தலைமை நிலையச் செயலர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.