மதுரை: அதிமுக தொண்டர்கள் என் பக்கம்இருக்கின்றனர் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இப்பிரச்சினையால் அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானத்தில் நேற்றுபிற்பகல் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர். அப்போது ஓபிஎஸ்ஸை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், ஓபிஎஸ் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் பெரியகுளம் சென்றார். அவருடன் நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். பல இடங்களில் ஆதரவாளர்கள் திரண்டு ஓபிஎஸ்ஸை வரவேற்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கமே இருக்கின்றனர். நான் அவர்களுக்காகவே இருப்பேன். இன்றைக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் யாரால், எப்படி ஏற்பட்டது, எவரால் இந்த சதி வலை பின்னப்பட்டது என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு மக்களே விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவர். அவர்கள் செய்த தவறுக்கு தொண்டர்கள் உரிய பாடத்தையும், தண்டனையும் உறுதியாக வழங்குவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்துஎன்னை யாராலும் நீக்க முடியாது. 2002-ல் தமிழக முதல்வராக அவர் பதவி ஏற்கும் முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பன்னீர்செல்வம் போன்ற ஒரு தூய தொண்டனை பெற்றது எனது பாக்கியம் என சான்றிதழ் கொடுத்தார். இதைத்தவிர வேறு சான்றிதழ் எனக்குத் தேவையில்லை.
எனது எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். ‘நமது அம்மா’ நாளிதழில் ஆரம்பத்தில் எனது பெயரை சேர்த்ததும் தெரியாது. தற்போது நீக்கியது குறித்தும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வாகனத்தில் ஓபிஎஸ் புறப்பட்டார். அந்த வாகனத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதைப் பார்த்ததும் ஒருவர் வேனில் ஏறி இபிஎஸ் படத்தை கிழித்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்களும் இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.