பல்வேறு குழப்பத்திற்கு இடையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் (ஈபிஎஸ் தரப்பினர் நிர்வாகிகள் கூட்டம்) இன்று நடைபெறும் நிலையில், அது குறித்து ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி உள்ளார். இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கக்கூடும் என தகவல் பரவிவருகிறது.
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் மிகத் தீவிரமாக இருந்த வரும் நிலையில், ஓபிஎஸ் ஒருபக்கம் மதுரையில் பேரணியும் சசிகலா மறுபுறம் புரட்சி பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். இப்படியான குழப்பமான காலகட்டத்தில், `அதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமை கழகம்’ சார்பில் ஒரு அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் தலைமை கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி: அரசியல் குழப்பங்களுக்கிடையே இன்று அதிமுக `நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்’
வழக்கமாக ஆலோசனை கூட்டம் என்றால் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை விடுவார்கள். ஆனால் தற்போது கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பெயரில் அந்த அறிக்கை வந்திருக்கிறது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இக்கூட்டம், அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னோட்டமாக இருக்குமா அல்லது பிரச்சனை வருமா என விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை நியமிப்பதும் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இக்கூட்டம் கூட்டப்படுவது குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட பதில் அறிக்கையில், `அதிமுக சட்ட திட்ட விதி 20Aன் கீழ், ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்திற்கு தான் எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விதியை மீறி கூட்டப்பட்டுள்ள இக்கூட்டமானது கழக சட்ட விதிகளுக்கு புறம்பானது. இன்றைய கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது, அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது’ என ஓபிஎஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்தவர்கள், `அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும்’ எனத் தெரிவித்திருந்தனர்.
கூட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன் செங்கோட்டையன், தம்பிதுரையுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்துள்ளார். அவரது இல்லத்திற்கு சுமார் 300 அதிமுக நிர்வாகிகள் கூடியிருந்தனர். அதிமுக தலைமையகத்திலும் நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதற்கிடையில் பெரியகுளத்திலிருந்து சென்னை புறப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மேற்கொண்டு அதிமுக-வில் இன்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு திருப்பங்கள் நிகழாலமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM