முனிச்: ஜெர்மனியில் ஜி7 மாநாடு நேற்றுதொடங்கியது. இதில் பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிஇந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிலும் இந்தியா சாதித்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 1975-ம் ஆண்டில் ஜி7 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில்அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 48-வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்துகிறது.
இதன்படி ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிட்டன்வால்ட் நகர் அருகே அமைந்துள்ள ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் நேற்று ஜி7 மாநாடு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ தெராவி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
உற்சாக வரவேற்பு: ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு இந்தியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலை வர்களுக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்தார். இதையேற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானத்தில் ஜெர்மனி புறப்பட்டார்.
ஜெர்மனியின் முனிச் நகர் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய அவருக்கு அந்த நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் ஜெர்மனி இசைக் கலைஞர்கள் இன்னிசை இசைத்து பிரதமரை வரவேற்றனர்.
விமான நிலையம் முதல் முனிச் நகரில் பிரதமர் தங்கிய ஓட்டல் வரைஇந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து, ‘‘பாரத் மாதா கீ ஜே’’ என்று முழக்கமிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓட்டல் வளாகத்தில் தன்னை வரவேற்ற சிறார்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
முனிச் நகரில் நேற்று மாலை இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இன்றைய தினம் மிகவும் முக்கியமானது. 47 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அவசர நிலையை அமல் செய்து ஜனநாயகத்தை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த நாள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம். எனினும் அந்த முயற்சியை இந்திய மக்கள் முறியடித்தனர்.
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் ஜனநாயகம் நமது பெருமை, கவுரவம். ஒவ்வொரு இந்தியரின் மரபணுவிலும் ஜனநாயகம் உள்ளது. கடந்த நூற்றாண்டில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டது. எனினும்அன்றைய தொழில் புரட்சியின் பலன்கள் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. இப்போது 4-வது தொழில்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த தொழில்புரட்சியில் இந்தியா முன்வரிசையில் உள்ளது. ஒட்டுமொத்த உலகத்துக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது.
இலவச உணவு தானியம்: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தின்மூலம் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு வசதி கிடைக்கிறது. கரோனா காலத்தில் சுமார் 80 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 2 ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 10 நாட்கள் வீதம் ஒரு யூனிகார்ன் நிறுவனம் உதயமாகிறது.
அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 99 சதவீத கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களிலும் மின் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைய புதிய இந்தியா ஒவ்வொரு துறையிலும் மிளிர்கிறது. அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முதல் நாளில் அர்ஜென்டினா அதிபர் அல்பர்டோ பெர்னாண்டஸை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். ஜி7 மாநாட்டின் 2-வது நாளான இன்று 2 அமர்வுகளில் பிரதமர் நரேந்திர பங்கேற்கிறார். இந்த அமர்வுகளில் எரிசக்தி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, பாலின சமநிலை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மாநாட்டின்போது அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.