இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருப்பதாக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் – தலைமை கழகம் என்ற பொறுப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் மிகத் தீவிரமாக இருந்த வரும் நிலையில், ஓபிஎஸ் ஒருபக்கம் மதுரையில் பேரணியும் சசிகலா மறுபுறம் புரட்சி பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். இப்படியான குழப்பமான காலகட்டத்தில், `அதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமை கழகம்’ சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தலைமை கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று இடம்பெற்றுள்ளது.
தற்போது உள்ள நிலையில் அதிமுகவின் கழக தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். இதை அடிப்படையாக வைத்தோ, இதையொட்டியோ இன்று நடைபெறும் ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஆலோசனை கூட்டம் என்றால் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை விடுவார்கள். ஆனால் தற்போது கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பெயரில் வந்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் கூட்டம் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னோட்டமாக இருக்குமா அல்லது பிரச்சனை வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM